கவுச்சார் : உத்தரகாண்டில் விபத்தில் சிக்கிய ராணுவ ஹெலிகாப்டரின் வாய்ஸ் ரிக்கார்டரும் ஹெலிகாப்டர் பறப்பு புள்ளி விவரங்களை பதிவு செய்யும் கருவியும் கிடைத்துள்ளன.
மழை, வெள்ளத்தால் கடுமையாக பாதித்துள்ள உத்தரகாண்டில் ராணுவ வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக 45க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஒவ்வொன்றும் தினமும் பல மணி நேரம் பறந்து மக்களை மீட்டு வருகின்றன.
அதில், எம்ஐ,17 என்ற ஹெலிகாப்டர் நேற்று முன்தினம் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது கீழே விழுந்து நொறுங்கியது. இதில், ஹெலிகாப்டரை இயக்கிய மதுரையை சேர்ந்த விமானி பிரவீன், அதில் பயணம் செய்த 19 வீரர்கள் பலியாகினர். விமானப்படை தளபதி பிரவுனி நேற்று காலை உத்தரகாண்ட் மாநிலம் கவுச்சார் வந்து, விமானப்படை உயர் அதிகாரிகளு டன் விபத்து பற்றி ஆலோசனை நடத்தினார். பின் னர் அவர் அளித்த பேட்டி:
ஹெலிகாப்டர் விபத்தில் மொத்தம் 20 பேர் பலியாகினர். அவர்களில் 5 வீரர்கள் விமானப்படையை சேர்ந்தவர்கள். ஆறு பேர் இந்தோ , திபேத் எல்லை படை போலீஸ் பிரிவை சேர்ந்தவர்கள். மற்ற 9 பேர் தேசிய பேரழிவு மீட்பு படையை சேர்ந்தவர்கள். விபத்தில் யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு இல்லை. விபத்து எப்படி நடந்தது? என்ன காரணம் என்பது இதுவரை தெரியவில்லை. விமானி அறையில் இருக்கும் வாய்ஸ் ரிக்கார்டரும், ஹெலிகாப்டரின் பறக்கும் புள்ளி விவரம் ஆகியவை கவுரிகுந்த் மலைப் பகுதியில் கிடைத்துள்ளன. அவற்றை ஆய்வு செய்த பிறகே, தொழில் நுட்ப காரணத்தால் விபத்து நடந்ததா? அல்லது விமானியின் தவறால் விபத்து நடந்ததா? என தெரிய வரும் என்றார்.