மைக்ரோசாப்ட் அதிரடி முடிவு விண்டோஸ் குறைபாடுகளை கண்டுபிடிப்போருக்கு பரிசு

மைக்ரோசாப்ட் அதிரடி முடிவு விண்டோஸ் குறைபாடுகளை கண்டுபிடிப்போருக்கு பரிசு

வாஷிங்டன் : விண்டோசில் உள்ள குறைபாடுகளை கண்டுபிடித்து, அதை தவிர்க்க சிறந்த வழிமுறைகளை கூறுவோருக்கு ரூ.30 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த மைக்ரோசாப்ட் நிறுவனம், விண்டோஸ் சாப்ட்வேர்களின் பல்வேறு வரிசைகளை வெளியிட்டு வருகிறது. கடைசியாக, விண்டோஸ்,8 சாப்ட்வேரை வெளியிட்டுள்ளது. இதையடுத்து மற்றொரு நவீன வரிசையை வெளி யிடும் நடவடிக்கையில் மைக்ரோசாப்ட் இறங்கி உள்ளது.

இந்நிலையில், விண்டோஸ் சாப்ட்வேரில் இருக்கும் பல்வேறு குறைபாடுகளை பயன்படுத்தி கொண்டு, ஹாக்கர்கள் எனப்படும் இணையதளத் தில் வைரசை பரப்பி குறிப்பிட்ட சாப்ட்வேர்களை முடக்குதல் அல்லது அதில் இருந்து தகவல்களை திருடுதல் போன்றவற்றை மேற்கொள்பவர்கள் தங்கள் காரியங்களை சாதித்துக் கொள்கின்றனர்.

சமீபத்தில், அமெரிக்காவின் சிடாடெல் நகரத்தில் வங்கியின் சாப்ட்வேரில் புகுந்து வாடிக்கையா ளர்களின் ரூ.2,950 கோடியை சத்தமில்லாமல் மர்ம நபர்கள் சுருட்டினர். இதேபோல், ஈரானின் அணு திட்டத்தையும் 2010ம் ஆண்டில் மர்ம நபர்கள் புகுந்து குளறுபடிகளை செய்தனர். இதில் குறிப்பிடத்தக்க விஷயம், இந்த சம்பவங்களிலும் இருந்த கம்ப்யூட்டர்களில் விண்டோஸ் சாப்ட்வேர்தான் இருந்தது.

இதனால் விண்டோஸ் சாப்ட்வேர் பாதுகாப்பானது அல்ல என்பதுபோன்ற தோற்றம் உருவாகி வருகிறது. இதை தடுப்பதற்காக அதிரடி நடவடிக்கையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் இறங்கி உள்ளது.இதன்படி, சமீபத்தில் வெளியிடப்பட்ட விண்டோஸ் வரிசையில் உள்ள குறைபாடுகளை கண்டுபிடித்து, அதற்கு தகுந்த வழி கண்டுபிடித்து சொல்பவர்களுக்கு ரூ.30 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் இத்திட்டம் அமலுக்கு வந்துள்ளதாகவும் மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.

மேலும், மோசடிகளை தடுக்கும் வழிமுறைகளை சொல்பவர்களுக்கு தனியாக ரூ.6.50 லட்சம் பரிசாக வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மொத்த பரிசுத் தொகை ரூ.59 லட்சமாகும். இனி வரும் காலங்களில் விண்டோஸ் சாப்ட்வேர்கள் அனைத்தும் இதுபோன்ற வழிமுறைகளின் மூலம் பாதுகாப்பானதாக உறுதி செய்யப்பட்ட பின்னரே வெளியிடவும் மைக்ரோசாப்ட் திட்டமிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Connect with Facebook