மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும்: ஆட்சியர்

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும்: ஆட்சியர்

மது அருந்தி வாகனம் ஓட்டுபவர்களின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும், என மாவட்ட ஆட்சியர் ந. வெங்கடாசலம் எச்சரித்துள்ளார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சாலைப் பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் குழுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் த. ஜெயசந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் கே. மனோகரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, ஆட்சியர் ந. வெங்கடாசலம் தலைமை வகித்து பேசியது:  செம்பட்டியிலிருந்து வத்தலகுண்டு செல்லும் நெடுஞ்சாலையில் விபத்து ஏற்படுவதைத் தடுக்க சமிஞ்ஞை விளக்கு அமைத்து கண்காணிக்க, காவல்துறை சார்பில் புறக்காவல் மையம் அமைக்கப்படும்.

ஜூன் மாதம் மாவட்டம் முழுவதும் 153 விபத்துகள் ஏற்பட்டுள்ளன. அதேபோல், மது அருந்தி வாகனங்களை ஓட்டிய 563 பேரின் மீதும், உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டிய 938 பேரின் மீதும் வழக்குப் பதியப்பட்டுள்ளது. இதில், மது அருந்தி வாகனம் ஓட்டியவர்கள் மீண்டும் இதே செயலில் ஈடுபட்டால், அவர்களின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும்.

ஒட்டன்சத்திரம், பழனி உள்ளிட்ட பகுதிகளில் விபத்துகளைத் தடுப்பதற்கு, சாலையின் நடுவே தடுப்புக் கம்பிகள் அமைக்கப்படும்.

பள்ளி வாகனங்கள், வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மூலம் மாந்தோறும் ஆய்வு செய்யப்படும்.

தாண்டிகுடி பகுதியில் காமனூர் முதல் சொடலங்காடு வரை பழுதாகி உள்ள சாலையை உடனடியாக சரிசெய்து, போக்குவரத்துக்குக்குப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

பள்ளி மாணவர்களின் வசதிக்காக, பழனி, வயலூர் வழி மிடப்பாடி, கொழுமங்கொண்டான், கோவிலம்மாபட்டி, நாச்சியப்பகவுண்டன் வலசு, கோரிக்கடவு ஆகிய பகுதிகளில் மீண்டும் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

கூட்டத்தில், வட்டாரப் போக்குவரத்துத் துறை, அரசுப் போக்குவரத்துக் கழகம், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித் துறை உள்ளிட்ட துறைகளின் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Connect with Facebook