பிரபல இந்தி நடிகர் பிரான் மரணம்!

பிரபல இந்தி நடிகர் பிரான் மரணம்!

மும்பை: பிரபல இந்தி நடிகர் பிரான் நேற்று இரவு மும்பையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 93. மிலன், மதுமதி, பாபி, காஷ்மீர் கி காலி, ஜன்ஜீர், டான், அமர் அக்பர் அந்தோனி, உப்கார் உள்ளிட்ட 400க்கும் மேற்பட்ட இந்திப் படங்களில் வில்லனாகவும் குணச்சித்திர நடிகராகவும் நடித்த பிரானின் இயற்பெயர் பிரான் கிஷன் சிகந்த். பாலிவுட்டின் பயங்கர வில்லன் என்ற இமேஜ் அவருக்கு இருந்தது.
உடல் நலக் குறைவால் மும்பை லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அவர் வெள்ளிக்கிழமை இரவு மரணம் அடைந்தார். பிரான் இறந்த செய்தியை அறிந்ததும் இந்தி திரையுலகை சேர்ந்த நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள் என ஏராளமான பிரபலங்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். புதுடெல்லியில் கடந்த மே மாதம் 3ம் தேதி நடைபெற்ற தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில், முதுமை மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக பிரான் பங்கேற்கவில்லை. மரபு காரணமாக அவர் சார்பில் யாரிடமும் இந்த விருது ஒப்படைக்கப்படவில்லை. கடந்த 10ம் தேதி மும்பையில் உள்ள நடிகர் பிரானின் வீட்டிற்கே சென்ற மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சர் மணிஷ் திவாரி, தாதா சாகிப் பால்கே விருதுக்கான தங்கத் தாமரை, பாராட்டுப் பத்திரம், சால்வை, ரொக்கப்பணம் ரூ.10 லட்சம் ஆகியவற்றை வழங்கினார்.
ஒரு மத்திய அமைச்சரே நடிகரின் வீடு தேடிப் போய் தாதா சாகிப் பால்கே விருதினை வழங்கியது இதுதான் முதல்முறை. மத்திய அரசின் உயரிய விருதான பத்மபூஷன் விருதினை 2001-ம் ஆண்டு பெற்றவர் பிரான். பிரானின் உடல் சிவாஜி பூங்கா மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Connect with Facebook