கலை, அறிவியல் கல்லூரிகளில் வேலை நேரம் அதிகரிப்பு

கலை, அறிவியல் கல்லூரிகளில் வேலை நேரம் அதிகரிப்பு

சென்னை: கல்லூரிகளில், செமஸ்டருக்கான வேலை நேரம் கூடுதலாக, 150 முதல், 450 மணி நேரம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான, சுற்றறிக்கைகளை உயர்கல்வி மன்றம், கல்லூரிகளுக்கு அனுப்பியுள்ளது.

தமிழகத்தில், 69 அரசு கல்லூரிகள், 163 அரசு உதவி பெறும் கல்லூரிகள், 500 சுயநிதி கல்லூரிகள் உள்ளன. தமிழகத்தில், உயர் கல்வி பெறும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், கல்லூரிகளில், மாலை வகுப்புகளை அரசு அறிமுகப்படுத்தியது. தற்போது சுழற்சி முறையில், காலை, மாலை என இரு வகுப்புகளில், லட்சக்கணக்கான மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.

காலை வகுப்புகள், காலை, 8:00 மணி முதல், பகல், 1:00 மணி வரையிலும், மாலை வகுப்புகள், பகல்,1:30 மணி முதல் மாலை, 6:30 மணி வரையிலும் நடக்கிறது. கல்லூரிகளில், ஒரு ஆண்டுக்கு, இரு பருவங்கள் என, ஒரு இளங்கலை பட்டப் படிப்புக்கு, ஆறு பருவங்கள் உள்ளன.

ஒரு பருவத்திற்கு, 90 வேலை நாட்கள். நாள் ஒன்றுக்கு, 5 மணி நேரம் என, மொத்தம் ஒரு பருவத்திற்கு, 450 மணி நேரம், மாணவர்கள் கல்வி கற்கின்றனர். தினமும் ஐந்து மணி நேர வகுப்பில், மாணவர்களுக்கு, ஐந்து பாடங்கள் கற்று தரப்படுகின்றன. ஒரு பாடத்தை, 50 நிமிடங்கள் வரை ஆசிரியர்கள் நடத்துகின்றனர்.

ஒரு நாளுக்கு, ஐந்து மணி நேரமே கல்லூரி இயங்குவதால், ஒரு பருவத்துக்கான பாடங்களை, உரிய காலத்தில் நடத்தி முடிக்க இயலாத நிலை இருப்பதாக, புகார் எழுந்தது. இதனால், கல்லூரிகளின், வேலை நேரம் அதிகரித்து, தமிழ்நாடு உயர்கல்வி மன்றம் உத்தரவிட்டது.

உயர்கல்வி மன்ற உத்தரவுப்படி, இளங்கலை பட்ட படிப்பில், முதல் நான்கு பருவங்களுக்கு, 150 மணி நேரம் முதல், 180 மணி நேரம் வரையிலும், அடுத்த இரண்டு பருவங்களுக்கு, 360 மணி நேரம் முதல் 450 மணி நேரம் வரையிலும், அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதற்கான, சுற்றறிக்கைகளை உயர்கல்வி மன்றம், கல்லூரிக்கு அனுப்பியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Connect with Facebook