தமிழகத்தின் மறைந்த முதல்வரான காமராஜரின், பிறந்த தினமான இன்று, “கல்வி வளர்ச்சி தினமாக’ கடைபிடிக்கப்படுகிறது. தமிழகத்தின் அனைத்து பள்ளிகளில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. தொண்டு, தூய்மை, எளிமை, தியாகம், நாட்டுப்பற்று ஆகிய பண்பு நலன்களுக்கும் மனிதவடிவம் கொடுத்தால் அது நிச்சயம் காமராஜராகத் தான் காட்சியளிக்கும் என்று தலைவர்களால் புகழப்பட்டவர்.
கல்வியே முதல் பணி:
காமராஜர் 1903ம் ஆண்டு ஜூலை 15ம் தேதி, விருதுநகரில் பிறந்தார். சுதந்திர போராட்ட வீரரும், சிறந்த பேச்சாளருமான சத்தியமூர்த்தியை, அரசியல் குருவாக ஏற்றுக் கொண்டவர். 1930ல் ராஜாஜி தலைமையில் வேதாரண்யத்தில் உப்புச்சத்யாகிரகம் நடைபெற்ற போது காமராஜரும் கலந்து கொண்டார். இதற்காக சிறைக்கும் சென்றார். 1936ல் காங்., கட்சியின் செயலளராக நியமிக்கப்பட்டார். 1940ல், சிறையிலிருக்கும் போதே, விருதுநகர் நகராட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1946-52 வரை சென்னை மாகாண காங்., தலைவராக இருந்தார். 1954ல், பதவியேற்ற இவர் 9 ஆண்டுகள் இப்பதவியில் இருந்தார். இவரது ஆட்சியின் போது கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். ஏழை, எளிய மாணவர்களும் கல்வி கற்க வேண்டும் என்ற எண்ணத்தில், இலவச மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். இவரது ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில், மத்திய அரசின் பல பொதுத்துறை நிறுவனங்கள் தொடங்கப்பட்டன.
பிரதமராகும் வாய்ப்பு:
கட்சியின் மூத்த தலைவர்கள் பதவிகளை இளைஞர் களிடம் கொடுத்து விட்டு, கட்சிப் பணியாற்ற வேண்டும் என்ற இவரது கொள்கையை பிரதமர் நேரு, காங்கிரஸ் கட்சி அளவில் செயல்படுத்த விரும்பினார். அது “கே- பிளான்’ என்ற சிறப்பினைப் பெற்றது. இந்தியாவின் பிரதமரை தேர்ந்தெடுக்கும் அளவுக்கு, தேசிய அரசியலில் முக்கியத்துவம் பெற்றவராக விளங்கினார். இவரது வாழ்க்கையை எடுத்துரைக்கும் விதத்தில் “காமராஜர்’ என்ற திரைப்படம் சில ஆண்டுகளுக்கு முன் வெளியானது.
எதிரிகளும் பாராட்டும் தலைவராக:
காமராஜர் மாற்றுக்கட்சி தலைவர்களும் பாராட்டும் தலைவராக விளங்கினார். காமராஜரையும், காங்கிரசையும் கடுமையாகத் தாக்கிய ஈ.வே.ரா.,”பச்சைத்தமிழன்’ என காமராஜரைப் பாராட்டினார். காங்கிரஸ் கட்சியையும், அதன் தலைமையையும் துவக்க காலத்தில் கடுமையாக விமர்சனம் செய்த எம்.ஜிஆர், பின், காமராஜர் என் தலைவர் என்று பகிரங்கமாக அறிவித்தார். அதுமட்டுமன்று மதுரை பல்கலைக்கழகத்திற்கு காமராஜர் பெயரை சூட்டினார்.
கடைசிவரை ஏழையாக:
காந்தியடிகளின் அகிம்சை, சத்தியம் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டு தியாக உணர்வுடன், தேசப்பணியில் ஈடுபட்ட காமராஜர், 1975 அக்.2ல், காந்தி பிறந்த தினத்தில், மறைந்தார். மறைந்த போது, இவரிடம் சிறிதளவு பணம் மட்டுமே இருந்தது. வங்கிக் கணக்கோ, சொத்தோ அவர் பெயரில் இல்லை. இறுதி வரை வாடகை வீட்டிலேயே வசித்தார். இவரது சேவைகளை பாராட்டி, மறைவுக்குபின் 1976ல், நாட்டின் மிக உயரிய “பாரத ரத்னா’ விருது காமராஜருக்கு வழங்கப்பட்டது.புனிதமான, எளிமையான வாழ்க்கையை வாழ்ந்த காமராஜருக்கு மக்கள், படிக்காத மேதை, ஏழைப்பங்காளன், கர்ம வீரர், தென்னாட்டு காந்தி, கிங் மேக்கர், பெருந்தலைவர் என்ற பட்டங்களை சூட்டி அவரை போற்றி வருகின்றனர்.