மதுரை: மதுரையில் நடந்த, கள்ளர் சீரமைப்பு பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வில், ஓர் ஆசிரியருக்கு, இரு பள்ளிகளில் பணியாற்ற உத்தரவிடப் பட்டதால், இத்துறை ஆசிரியர்களின் வேதனை தொடர்கதையாகி உள்ளது.
மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்ட, கள்ளர் சீரமைப்பு பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு, மதுரை கள்ளர் சீரமைப்புத் துறை இணை இயக்குனர் அலுவலகத்தில் நடந்தது. காலையில், உயர்நிலை, மேல்நிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி மாறுதல்; மாலையில், தொடக்க கல்வி தலைமை ஆசிரியர், இடைநிலை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் பணிமாறுதல் கலந்தாய்வு நடந்தது. காலிப் பணியிடங்கள், 282 காட்டப்பட்டன. 334 ஆசிரியர்கள் பங்கேற்றனர்; 97 ஆசிரியர்களுக்கு, மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டது. ஆசிரியர்கள் பற்றாக்குறையால், “ஒரு ஆசிரியர், இரு பள்ளிகளில் பணியாற்ற வேண்டும்&’ என்று, கடந்தாண்டு கலந்தாய்வில் உத்தரவிடப்பட்டது. இந்த முறையை, இவ்வாண்டு கலந்தாய்வில் ரத்து செய்ய வேண்டும் என, ஆசிரியர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், நேற்று நடந்த கலந்தாய்வில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு, வழங்கப்பட்ட மாறுதல் உத்தரவில், “மாறுதல் கோரும் பள்ளியில், மூன்று நாட்களும், பழைய பள்ளியில், இரண்டு நாட்களும் பணியாற்ற வேண்டும்&’ என, குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில செயலர், நவநீதகிருஷ்ணன் கூறியதாவது: ஓராசிரியர் இரு பள்ளிகளில் பணியாற்றும், “இரட்டை சவாரி&’ முறையை ரத்து செய்ய வேண்டும் என, இத்துறையின் அனைத்து ஆசிரியர்களும் எதிர்பார்த்தனர். ஆனால், இந்தாண்டும் தொடர்வது வேதனையாக உள்ளது. இதனால், இரு பள்ளிகளையும் ஒரே ஆசிரியரால், முழுமையாக கவனிக்க முடியாத சூழ்நிலை ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.