வாணியம்பாடி : உயர்நிலைப்பள்ளி மாணவர் எண்ணிக்கையில் பாதி பேருக்கு மேல் மதிய உணவு கிடைக்காதால் ஏமாற்றமடைந்த மாணவர்கள் பசியால் அழுதனர்.
வாணியம்பாடி அடுத்த நாட்றம்பள்ளி ஒன்றியத்துக்கு உட்பட்ட திம்மாம்பேட்டை கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இதில் திம்மாம்பேட்டை, அலசந்தாபுரம், ஆவாரங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று மாணவர்களுக்கு அரசின் சத்துணவு திட்டத்தின் கீழ் மதிய உணவு வழங்கப்பட்டது. இதற்காக அனைத்து மாணவர்களும் தங்கள் தட்டை ஏந்தி வரிசையில் காத்திருந்தனர். முதலில் வந்த 220 மாணவர்களுக்கு மட்டும் உணவு வழங்கப்பட்டது. மீதம் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு சத்துணவு காலியாகி விட்டதாக கூறி உணவும், முட்டையும் வழங்கவில்லை. இதனால் பசி மயக்கத்தில் இருந்த மாணவர்கள் சத்துணவு அமைப்பாளர் ராமச்சந்திரனிடம் முறையிட்டனர்.
அதற்கு அவர் மாணவர்களை அலட்சியப்படுத்தி விரட்டியதாக கூறப்படுகிறது. மதிய சாப்பாடு கிடைக்காத சில மாணவர்கள் பசியால் அழுதனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டு ஊராட்சி மன்றத் தலைவரை வரவழைத்தனர். பின்னர் சத்துணவு அமைப்பாளரிடம் இது குறித்து கேட்டனர்.
அதற்கு அவர், ”மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப உணவுபொருட்கள் வழங்கவில்லை. அதனால் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார். இது குறித்து ஊராட்சி மன்றத் தலைவர் நாட்றம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்வேலனிடம் தொலைபேசியில் தகவல் தெரிவித்தார்.
தகவலின்பேரில் வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்வேலன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப அரிசி, பருப்பு, காய்கறிகள் வழங்கப்பட்டது தெரியவந்தது. மேலும் விசாரணையில் 475 மாணவர்களில் 270 மாணவர்களுக்கு மட்டுமே முட்டை வழங்கப்பட்டதும் தெரிந்தது. மேலும் சுகாதாரம் மற்றும் தரமற்ற முறையில் சாதம், சாம்பார் தயாரித்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அப்போது சத்துணவு அமைப்பாளரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டனர். இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்வேலன் கூறுகையில், ”இந்த பள்ளி மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்பதான் உணவுபொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அமைப்பாளர் முறைகேடு செய்துள்ளதால் தான் மாணவர்களுக்கு உணவு மற்றும் முட்டை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு தகவல் தெரிவிக்கப்படும்” என்றார்.
அதிகாரிகள் வரும்போது தரமான உணவு
தமிழக முதல்வர் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கிவருவதோடு, உணவு முறையில் 13 வகையான சாப்பாடு பரிமாறவும் உத்தரவிட்டுள்ளார். ஆனால் இதுபோன்ற சிலர் மதிய உணவு திட்டத்தில் முறைகேடு செய்வதால் அதன் பலன் மாணவர்களை சேராமல் போய்விடுகிறது. இந்த திட்டம் முறையாக அமல்படுத்தப்படுகிறதா என அதிகாரிகளும் அவ்வப்போது சென்று சோதனை செய்யாததே முறைகேடு நடப்பதற்கு காரணம் என கூறப்படுகிறது. சில இடங்களில் எப்போதும் தரமற்ற உணவு வழங்கப்படும் நிலையில், அதிகாரிகள் சோதனைக்கு வரும்போது மட்டும் தரமான உணவு வழங்கப்படுகிறது என மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
பார்களுக்கு முட்டை சப்ளை
மாணவர்களுக்கு ஊட்டச்சத்து வழங்க வேண்டும் என்ற நோக்கோடு அரசின் சார்பில் மாணவர்களுக்கு முட்டை வழங்கப்படுகிறது. இந்த முட்டை வெளி சந்தையில் 3.50க்கு விற்கப்படுகிறது. ஆனால், சத்துணவு முட்டையை ஸீ2க்கு விற்கின்றனர். மேலும் வேகவைத்த முட்டைகள் மதுக்கடை பார்களுக்கு 4க்கு விற்கப்படுகிறதாம். இதனால் சத்துணவு முட்டைக்கு பார் உரிமையாளர்கள் நிரந்தர வாடிக்கையாளர்களாக உள்ளதாக கூறப்படுகிறது.