திண்டுக்கல் பஸ்ஸ்டாண்ட் மாற்றியமைப்பதில் சிக்கல் போக்குவரத்து நெரிசலால் இடமாற்றம் அவசியம்

திண்டுக்கல் பஸ்ஸ்டாண்ட் மாற்றியமைப்பதில் சிக்கல் போக்குவரத்து நெரிசலால் இடமாற்றம் அவசியம்

திண்டுக்கல்:திண்டுக்கல் நகரில் பெருகி வரும் மக்கள் தொகை, வாகனங்கள் அதிகரிப்பு காரணமாக போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. பஸ்ஸ்டாண்டை மாற்றியமமைக்கும் திட்டம் தோல்வியடைந்ததால், இதை இடமாற்றம் செய்ய நகராட்சி நிர்வாகம் முன்வரவேண்டும். திண்டுக்கல் நகரின் மையத்தில் ஆறு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது பஸ்ஸ்டாண்ட். பஸ் ஸ்டாண்ட் பெரிதளவில் இருந்தாலும், பஸ்கள் வந்துசேர முறையான ரோடுகள் இல்லை. அரசு மருத்துவமனை, ஆர்.டி.ஓ., அலுவலக ரோடு, போஸ்டாபீஸ் ரோடு என மக்கள் அதிக நடமாட்டம் உள்ள பகுதிகளை கடந்து பஸ்கள், பஸ்ஸ்டாண்ட் செல்லவேண்டியுள்ளது. போக்குவரத்து அதிகம் காரணமாக மக்கள் நடந்துசெல்லவே சிரமப்படுகின்றனர்தோல்வி: தற்போதுள்ள பஸ்ஸ்டாண்டில் மாற்றம் செய்ய நகராட்சி நிர்வாகம் பொதுநிதியில் ரூபாய் 1.5 கோடியுடன், கடைகள் கட்டுவதன் மூலம் முன்தொகையாக கடைபெறுவர்களிடம் ரூ.3 கோடி வசூலித்து பஸ்ஸ்டாண்டில் மாற்றம் செய்ய முயன்றது. பல முறை டெண்டர் விடப்பட்டும், ஒருவர் கூட முன்தொகை கட்டி கடைகளை எடுக்க முன்வரவில்லை.

இதனால் இத்திட்டம் தோல்வியில் முடிந்தது.பரப்பு விரிவடைதல்: திண்டுக்கல் நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் பரப்பு விரிவடையவுள்ளது. இதனால் பஸ்ஸ்டாண்டை புறநகர் பகுதிக்கு கொண்டு சென்றாலும் மாநகராட்சி எல்லைக்குள் தான் வரும். முன்பு போல் ஊராட்சி எல்லைக்குள் சென்றுவிடும் என அஞ்சத்தேவையில்லை. தற்போதுள்ள பஸ்ஸ்டாண்டை நகர பஸ்கள் வந்துசெல்லும் இடமாக பயன்படுத்தி கொள்ளலாம். இதன் மூலம் கிராமப்புறங்களில் இருந்து திண்டுக்கல் வரும் மக்களுக்கு பாதிப்பு இருக்காது.மதுரையிலிருந்து திண்டுக்கல் வழியாக சேலம், ஈரோடு செல்லும் பஸ்களும், திண்டுக்கல்லில் இருந்து திருச்சி, பழநி, மதுரை ஆகிய ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் புறநகரில் இருந்து இயக்கப்பட்டால் நகரில் போக்குவரத்து நெரிசலுக்கு முற்றிலுமாக தீர்வு காணப்படும்.இடமாற்றம்: முருகபவனம் பகுதியில் குப்பைக்கிடங்கு 12 ஏக்கரில் உள்ளது. இந்த இடத்தில் பஸ்ஸ்டாண்ட் இடமாற்றம் செய்யலாம். குப்பை கிடங்கை நகருக்குவெளியே மாற்றலாம் அல்லது பைபாஸ் ரோடு அருகே தனியார் இடம் கூட கையகப்படுத்தி பஸ்ஸ்டாண்டை இடமாற்றம் செய்யலாம்.கிருபாகரன் (மாவட்ட தொழில் வர்த்தகர் சங்க தலைவர்):மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ள திண்டுக்கல் நகரில் அடிப்படை வசதிகளில் மாற்றம் கொண்டுவருவதன் முதல்படியாக பஸ்ஸ்டாண்டை மாற்றவேண்டும். வாகனங்களால் நெரிசல் அதிகரித்துள்ளது. மக்கள் நடந்து செல்லவே சிரமம் அடைகின்றனர்.என்.ரவிசுப்பிரமணி, (பஸ்ஸ்டாண்ட் கடை குத்தகைதாரர்கள் நலச்சங்க தலைவர்): பஸ்ஸ்டாண்ட் வந்துசெல்லும் பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏ.எம்.சி., ரோட்டில் பஸ்கள் உள்ளே வந்து வெளியேறி செல்வதில் அதிக சிரமம் உள்ளது. பயணிகள் சிரமம் அடைகின்றனர். பயணிகளின் நலன் கருதி பஸ்ஸ்டாண்டை புறநகர் பகுதிக்கு மாற்றுவது அவசியம். பழனியப்பன்(நகர அமைப்பு அலுவலர்): நகராட்சிக்கு சொந்தமான இடம் புறநகர் பகுதியில் இல்லை. மாநகராட்சிக்கான உத்தரவு வரும்நிலையில், எல்லை விரிவாக்கத்தின் மூலம், புறநகர் பகுதியில்அதிக இடம் கிடைக்க வாய்ப்புள்ளது. அப்போது பஸ்ஸ்டாண்ட் இடமாற்றம் குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Connect with Facebook