திண்டுக்கல்:திண்டுக்கல் சில்வார்பட்டியைச்சேர்ந்த லோகநாதன், எஸ்.பி., ஜெயச்சந்திரனிடம் அளித்த புகார்: இ.குரும்பபட்டியை சேர்ந்த வே.சுப்ரமணி,32. திண்டுக்கல்லில் ஐஸ்வர்யா இன்போடெக் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தினார்.
இதில் முதலீடு செய்தால் மாத வட்டியாக 15 சதவீதம் தருவதாகவும், 6 மாத காலத்தில் அசலை திரும்பத் தந்துவிடுவதாக கூறினார். ஏஜன்டாக பணிபுரிந்தால் ஒரு சதவீத வட்டி தொகை கமிஷனாக தருவதாகவும் கூறினார். இதை நம்பி, ரூபாய் 19 லட்சத்து 55 ஆயிரம் முதலீடு செய்தேன். இரண்டு மாதம் வட்டி கொடுத்தார். அதன்பின் அசல், வட்டிபணம் தராமல் தலைமறைவாகிவிட்டார், என புகாரில் கூறியிருந்தார்.
உத்தரவு: புகார் குறித்து விசாரிக்க, மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு எஸ்.பி., உத்தரவிட்டார். இன்ஸ்பெக்டர் பாண்டியராஜன் தலைமையிலான போலீசார், சுப்ரமணியை நேற்று கைது செய்தனர். சுப்ரமணி சமீபத்தில் திண்டுக்கல் கோர்ட்டில் திவால் நோட்டீஸ்(நொடிப்பு நிலை ஐ.பி.,) தாக்கல் செய்துள்ளார்.
இன்ஸ்பெக்டர் கூறுகையில்,””ஐஸ்வர்யா இன்போ டெக்கை நடத்திய சுப்ரமணி, 300 பேரிடம், ரூபாய் 4.50 கோடி வரை, மோசடி செய்துள்ளது தெரிய வந்துள்ளது. கைதான இவரது, சொத்துக்களை பறிமுதல் செய்து, முதலீடு செய்தவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை
எடுக்கப்படும்,” என்றார்.