பீகார் அரசு பள்ளியில் 22 குழந்தைகள் பலி: மதிய உணவில் விஷம் கலந்ததா?

பீகார் அரசு பள்ளியில் 22 குழந்தைகள் பலி: மதிய உணவில் விஷம் கலந்ததா?

பாட்னா: பீகார் அரசு பள்ளியில் குழந்தைகள் சாப்பிட்ட மதிய உணவில் விஷம் கலக்கப்பட்டு இருப்பதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. பீகார் மாநிலத்தில் சரண் மாவட்டம் தர்மசதி கந்தவான் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் நேற்று முன்தினம் வழங்கப்பட்ட மதிய உணவை சாப்பிட்ட சிறிது நேரத்தில் மாணவர்கள் ஒவ்வொருவராக வாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர். அவர்கள் உடனடியாக சாப்ராவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி 16 மாணவர்கள் இறந்தனர். இவர்கள் அனைவரும் 10 வயதுக்கு உட்பட்டவர்கள். ஒன்று முதல் 5ம் வகுப்பு மாணவர்கள். கவலைக்கிடமாக இருந்தவர்கள் பாட்னா மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு 4 பேர் இறந்தனர். நேற்று காலை மேலும் 2 பேர் இறந்தனர்.

இதனால், பலியானோர் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்தது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.பலியான சிறுவர்களில் 2 பேர், இப்பள்ளியில் சமையல் செய்யும் பெண் ணின் பிள்ளைகள். மற்றொரு சமையல்கார பெண்ணின் 3 பிள்ளைகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநில அரசின் அலட்சியத்தால் இந்த பரிதாப சம்பவம் நடந்ததாக குற்றம்சாட்டி, சாப்ராவில் பாஜ, ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் நேற்று பந்த் நடத்தின. இதில், பல இடங்களில் வன்முறை ஏற்பட்டது. போலீஸ் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. பாட்னாவில் மதிய உணவு திட்ட அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.இந்நிலையில், குழந்தைகள் பலியான சம்பவம் பற்றி புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. மதிய உணவு பரிமாறப்பட்டதும் அதை சாப்பிட்ட குழந்தைகள், ‘உணவு கெட்டு போய் விட்டது. சாப்பிட முடியவில்லை‘ என்று தலைமை ஆசிரியை மீனா தேவிடம் கூறியுள்ளனர். அதற்கு அவர், ‘ஒழுங்காக சாப்பிட்டு விட்டு எழுங்கள்‘ என்று மிரட்டி சாப்பிட வைத்துள்ளார்.

சாப்பிட்டு முடித்ததும் குழந்தைகள் வயிறு வலிப்பதாக கூறி அழுதுள்ளனர். அவர்களை வீட்டுக்கு செல்லும்படி அவர் விரட்டியுள்ளார். வீட்டுக்கு செல்லும் வழியில், குழந்தைகள் ஆங்காங்கு வாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளனர். நேற்று முன்தினம் சமைக்கப்பட்ட உணவுக்கான பொருட்களை, மீனா தேவியின் கணவர்தான் கொடுத்ததாக சமையல்கார பெண் கூறியுள்ளார். இந்த சம்பவத்தை தொடர்ந்து, மீனா தேவி தனது குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டார். போலீசார் அவரை தேடி வருகின்றனர்.மருத்துமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களை பல்வேறு கட்சித் தலைவர்கள் பார்த்து ஆறுதல் கூறி வருகின்றனர். பாஜ துணை தலைவரான சி.பி. தாக் கூரும் மருத்துவமனைக்கு சென்றார். அவர் ஒரு டாக்டரும் கூட. ‘‘உணவில் ஆர்கனோ பாஸ்பரஸ் என்ற விஷ பொருள் கலந்துள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது‘‘ என்று அவர் கூறியுள்ளார். உணவில் வேண்டும் என்றே விஷம் கலக்கப்பட்டு இருக்கலாம் என்று பீகார் அரசு சந்தேகம் தெரிவித்துள்ளது. இது பற்றி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Connect with Facebook