டெலிபோனில், ஒருவருக்கொருவர் பார்த்து பேசும் நவீன வசதி பி.எஸ்.என்.எல். விரைவில் அறிமுகம்

டெலிபோனில், ஒருவருக்கொருவர் பார்த்து பேசும் நவீன வசதி பி.எஸ்.என்.எல். விரைவில் அறிமுகம்

டெலிபோனில், ஒருவருக்கொருவர் நேரில் பார்த்து பேசக்கூடிய, ‘‘வீடியோ காலிங்’’ என்ற புதிய சேவையை பி.எஸ்.என்.எல். சென்னை டெலிபோன் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.

தொலைதொடர்பு துறையில், தனியார் நிறுவனங்கள் போட்டிக்கு வந்துள்ள நிலையிலும் பி.எஸ்.என்.எல். தொடர்ந்து புதிய சேவைகளை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் இப்போது ‘‘வாய்ஸ் அண்டு வீடியோ ஆன் பிராட்பேண்ட் சர்வீஸ்’’ (விவிஓபிபி) என்ற புதிய சேவையை தொடங்கி உள்ளது.

வீடியோ காலிங் என்று சொல்லப்படும் இந்த சேவையில், இதற்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட டெலிபோனில், ஒரு முனையில் இருந்து மறுமுனையில் இருப்போருடன் முகம் பார்த்து பேச முடியும். தற்போது ஒருவருக்கொருவர் நேரில் பார்த்து பேசும் வசதி ‘வெப் கேமரா’ பொருத்தப்படும் கம்ப்யூட்டரில் உள்ளது.

இது தவிர மொபைல்போன், லேப்–டாப் போன்றவற்றிலும் இது சாத்தியமாகும். பி.எஸ்.என்.எல். அறிமுகப்படுத்தியுள்ள வீடியோ காலிங் சேவையைப்பெற அதிவேக பிராட்பேண்டு இணைப்புடன் மோடம் மற்றும் இதற்கென வடிவமைக்கப்பட்ட டெலிபோன் இருந்தால் போதும்.

வெப் கேமரா பொருத்தப்பட்ட கம்ப்யூட்டரில் பேசும்போது ஏற்படக்கூடிய நூலிழை தடங்கல்கூட, வீடியோ காலிங் சேவையில் இருக்காது. தகவல் பரிமாற்றத்துக்கு வீடியோ காலிங் மிகுந்த பலன் அளிக்கும் என்று பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் தெரிவித்தனர்.

சாதாரண மக்களுக்கும் இந்த சேவை கிடைக்க வேண்டும் என்ற வகையில், நாடுமுழுவதும் 10 ஆயிரம் ‘பிசிஓ’க்களில் இந்த சேவையை தொடங்க திட்டுள்ளதாகவும், இவை வீடியோ காலிங் ஆபீஸ் (வீ.சி.ஓ.) என்று அழைக்கப்படும் என்றும், முதல்கட்டமாக 350 இடங்களில் தொடங்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

டெல்லி, ஆந்திராவில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘விவிஓபிபி’ சேவை தொடங்கப்பட்டுள்ளது. ஆந்திராவில், சில தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இதற்கென வடிவமைக்கப்பட்ட போன்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது.

ஆந்திராவில், வீடியோகால் சேவைக்கு நிமிடத்துக்கு 2½ ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் விலை 14 ஆயிரம் ரூபாயில் இருந்து 4 லட்சம் ரூபாய் வரையில் நிர்ணயித்துள்ளனர். சென்னை டெலிபோன் நிறுவனம் இந்த சேவையை விரைவில் வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.

தவணை முறையில் வீடியோ காலிங் சேவைக்கான சாதனங்களை வழங்கவும் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆரம்பத்தில், அரசுத்துறை, வணிக நிறுவனங்களை குறிவைத்து இந்த சேவையை முதலில் தொடங்க இருப்பதாகவும் சென்னை டெலிபோன் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Connect with Facebook