குஜராத் நிர்வாகத்தில் நவீன தொழில்நுட்பம்: மோடியின் புதுமை திட்டம்

குஜராத் நிர்வாகத்தில் நவீன தொழில்நுட்பம்: மோடியின் புதுமை திட்டம்

குஜராத்தில் ஜி.பி.எஸ்., (குளோபல் பொசிஷனிங் சிஸ்டம்) முறையைப் பயன்படுத்தி பழங்குடியினருக்கு நிலம் வழங்கும் புதுமை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

பல நூற்றாண்டுகளாக காடுகளில் பழங்குடியினர் பயன்படுத்தி வந்த நிலத்தை, அவர்களுக்கே தர ஏற்பாடு செய்யுமாறு மாநில அரசுகளை, மத்திய அரசு கேட்டுக்கொண்டது.

 

இதற்கு முன் பழங்குடியினரின் நிலத்தை அந்தந்த மாநில அரசுகள் கையகப்படுத்தி இருந்தன. வனத்துறையினரால் எப்போது வேண்டுமானாலும் நிலம் பறிக்கப்படலாம் என்ற சூழலில் பழங்குடியினர் இருந்தனர். தங்கள் நிலத்தை வழங்க வேண்டும் என போராடி வந்தனர். குஜராத் அரசு பழங்குடியினருக்கு நிலத்தை வழங்க முடிவு செய்தது.

 

ஜி.பி.எஸ்., தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நிலத்தை சர்வே செய்ய வேண்டும் என்ற ஏ.ஆர்.சி.எச்., (ஆக்ஷன் ரிசர்ச் இன் கம்யூனிட்டி ஹெல்த் அண்டு டெவலப்மென்ட்) என்ற தொண்டு நிறுவனத்தின் ஆலோசனையை ஏற்றுக் கொண்டது. ஜி.பி.எஸ்., சாதனத்தின் விலை ரூ. 12 ஆயிரம். இக்கருவியிலுள்ள பட்டனை அழுத்திய பின், தனது நிலத்தை சுற்றி ஒருவர் நடந்து வந்தால், அக்கருவி தானாகவே நிலத்தின் வரைபடத்தை தந்து விடுகிறது. இப்படங்களை கிராம சபை ஆராய்ந்து ஒப்புதல் அளிக்கிறது. இந்த வரைபடங்கள், 2005ல் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படத்துடன் ஒப்பிடப்பட்டு, சரியாக இருந்தால் நில உரிமை வழங்கப்படுகிறது. ஒரே நிலப்பகுதியில் இரண்டு பேர் அளந்திருந்தால், அப்பிரச்சனை கிராம சபையிடம் ஒப்படைக்கப்பட்டு, பிரச்சனை தீர்ந்தபின் சம்மந்தப்பட்டவர்களுக்கு நிலம் ஒப்படைக்கப்படுகிறது.

 

மொத்தம் விண்ணப்பிக்கப்பட்ட 1,82,000 விண்ணப்பங்களில், 1,28,000 விண்ணப்பங்களை போதிய ஆவணங்கள் இல்லை எனக் கூறி குஜராத் அரசு நிராகரித்தது. இதை எதிர்த்து தொண்டு நிறுவனங்கள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. விசாரணையில் சில ஆவணங்களை சான்றாக எடுத்துக் கொண்டு, நிலத்தை மக்களுக்கு வழங்க வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டது. இதை ஏற்றுக் கொண்ட குஜராத் அரசு, அதன்படி திட்டத்தை நடைமுறைப்படுத்தியது. முதற்கட்டமாக 150 கிராமங்களில் ஆரம்பிக்கப்பட்ட இத்தொழில் நுட்பம், பெரிய அளவில் பயன் தந்துள்ளது.

 

ஜி.பி.எஸ்., வரைந்த வரைபடங்கள் கிராமசபை மூலம் இணையதளத்தில் ஏற்றப்பட்டது. இதற்காக அரசு நிதியை எதிர்பார்க்காமல், பழங்குடி மக்கள் தலா 60 ரூபாய் தந்ததால் இத்திட்டம் விரைவாக செயல்பட்டது. இத்திட்டத்தை செயல்படுத்திய கிராமங்கள், அருகிலுள்ள கிராமங்களுக்கு பயிற்சி அளிப்பதால் திட்டம் வேகமாக நடைபெறுகிறது. பிரதமர் வேட்பாளர் என கருதப்படும் மோடி, முதல்வராக இருக்கும் குஜராத்தில் பல நிர்வாக சீர்திருத்தங்கள் செய்யப்படுகின்றன என்பதற்கு, இத்திட்டம் இன்னொரு உதாரணம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Connect with Facebook