அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்கள் பட்டியல்: 16வது இடத்தில் தோனி

அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்கள் பட்டியல்: 16வது இடத்தில் தோனி

நியூயார்க் : உலகில் அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்களின் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி 16வது இடத்தில் உள்ளார். ஒப்பந்தங்கள் அடிப்படையிலான பரிசுத் தொகையாக 2012- 13ம் ஆண்டில் இவர் ரூ.180 கோடி வருமானம் ஈட்டி உள்ளார்.

உலகில் அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்களின் பட்டியலை அமெரிக்காவின் ஃபோர்பஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. இதில் 31 வயதாகும் தோனி ரூ.180 கோடி (31.5 மில்லியன் டாலர்) வருமானமாக பெற்றுள்ளார். அதிகம் சம்பாதிக்கும் வீரர்கள் பட்டியலில் கோல்ஃப் வீரர் டைகர்வுட்ஸ் முதல் இடத்தில் உள்ளார். இவர் சம்பாதித்த தொகை ரூ.444 கோடிகளாகும். இவரைத் தொடர்ந்து டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் ரூ.406 கோடிகளுடன் 2வது இடத்தில் உள்ளார். அமெரிக்க கூடைப்பந்து வீரர் கோப் பிரையன்ட் ரூ.347 கோடிகளுடன் 3வது இடத்தில் உள்ளார்.

அதிகம் சம்பாதிக்கும் வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் 2012ல் ரூ.125 கோடி சம்பாதித்து 51வது இடத்தில் இருந்தார். இந்த ஆண்டு ‌சச்சினை தோனி பின்னுக்கு தள்ளி 16வது இடத்தை பிடித்துள்ளார். இந்த வீரர்கள் பட்டியலில் தோனியை தொடர்ந்து பெராரியின் ஃபார்முலா ஒன் கார் பந்தய வீரர் பெர்னாண்டோ அலன்சோ 19வது இடத்திலும், வடக்கு அயர்லாந்தின் கோல்ஃப் வீரர் ரோரி மெக்லோரி 21வது இடத்திலும், லீவிஸ் ஹாமிள்டன் 26வது இடத்திலும், நோவாக் ஜோகோவிக் 28வது இடத்திலும், ரஃபேல் நடால் 30வது இடத்திலும், உசைன் போல்ட் 40வது இடத்திலும் உள்ளனர். 100 வீரர்களை கொண்ட இந்த பட்டியலில் 3 பெண்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். இவர்களில் டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரப்போவா 29 மில்லியன் டாலர்களுடன் 22வது இடத்தில் உள்ளார். அதிகம் சம்பாதிக்கும் வீராங்கனைகளில் இவர் முதலிடத்தில் உள்ளார். செரினா வில்லியம்ஸ் 68வது இடத்தில் உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Connect with Facebook