பிணத்துடன் 5 நாட்கள் வாழ்ந்த தங்கை… பயங்கரம்

போபால்: மத்தியபிரதேச மாநிலத்தில் உயிரிழந்த அக்காவின் சடலத்துடன் 5 நாட்கள் உயிர்வாழ்ந்துள்ளார் பாசக்கார தங்கை. மரணத்தில் மர்மம் நீடிப்பதால் பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பியுள்ளனர். போபால் நகரின் புது மார்க்கெட் பகுதியில் ராதா அகர்வால் (55), சரஸ்வதி (42) ஆகிய சகோதரிகள் அடுக்குமாடி வீட்டில் தனியாக வசித்து வந்தனர். இவர்கள் வாழ்க்கைக்கு தேவையான பணம் எங்கு? யாரிடம் இருந்து வருகிறது? என்பதும் புரியாத புதிராகவே இருந்து வந்தது. ஆண் துணை ஏதுமின்றி தனிமையில் வசித்த இவர்கள் அக்கம்பக்கத்தினருடன் அதிகமாக தொடர்பு வைத்துக் கொள்வதை தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று இவர்களின் வீட்டில் இருந்து தாங்க முடியாத துர்நாற்றம் வீசுவதை சகித்துக்கொள்ள முடியாத அந்த குடியிருப்புவாசிகள், போலீசில் புகார் அளித்தனர். போலீசார் அந்த வீட்டின் கதவை திறந்து பார்த்தபோது உள்ள ராதா அகர்வால் அழுகிய நிலையில் சடலமாக கிடந்தார். சகோதரியின் சடலத்தின் அருகே தன்நிலை மறந்த நிலையில் அமர்ந்திருந்த சரஸ்வதியை தேற்றிய போலீசார் பிரேதத்தை கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ராதா அகர்வால் 5 நாட்களுக்கு முன்னர் இறந்திருக்கலாம் என்று கூறிய போலீசார், அவர் எப்படி இறந்தார் என்பதை பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னர்தான் இறுதி செய்ய முடியும் என்று தெரிவித்தனர். ராதா அகர்வாலின் மரணத்தில் மர்மம் நீடிப்பதாக அக்கம்பக்கத்தினர் கருதுவதால் பிரேத பரிசோதனை முடிவுக்கு பின்னரே எதையும் தெளிவாக கூற முடியும் என கூறியுள்ளனர். போலீசார் அளித்த தகவலையடுத்து இந்தூரில் இருந்து வந்த அவர்களின் சகோதரர் இறுதி யாத்திரைக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டார். பூட்டிய அறைக்குள் சகோதரி சடலத்துடன் பெண் ஒருவர் 5 நாட்களாக தனிமையில் வசித்த சம்பவம் போபாலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Be the first to comment on "பிணத்துடன் 5 நாட்கள் வாழ்ந்த தங்கை… பயங்கரம்"

Leave a comment

Your email address will not be published.


Connect with Facebook

*