மணிவண்ணனுக்கு வந்த மாரடைப்பு மற்றும் அகால மரணத்துக்குக் காரணமே, இரு தினங்களுக்கு முன்பு விகடனில் வெளியான பாரதிராஜாவின் அவதூறுப் பேட்டிதான்… அவரது கொடூரமான வார்த்தைகளே மணிவண்ணனைக் கொன்றுவிட்டன என்று திரையுலகில் பரபரப்பாக பேசப்படுகிறது. பாரதிராஜாவிடமிருந்து வந்து மிகப் பெரிய வெற்றிகளைப் பெற்ற இயக்குநர்கள் இருவர்தான். ஒருவர் கே பாக்யராஜ். மற்றவர் மணிவண்ணன். பாரதிராஜாவின் கேம்பில் எழுத்தாளர்கள் என கம்பீரமாகச் சொல்லிக்கொண்ட இருவர் பாக்யராஜும் மணிவண்ணனும்தான். இதை பலமுறை பாரதிராஜாவே கூறியுள்ளார். மணிவண்ணன் மிகவும் சுறுசுறுப்பானவர். அவர் வேகத்துக்கு படப்பிடிப்பில் யாராலும் ஈடு கொடுக்க முடியாது. அதே நேரம் மிக இளகிய மனம் படைத்தவர். தன்னிடம் பழகிய அனைவரிடமுமே வெளிப்படையாக நடந்து கொள்பவர். எதையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் பக்குவம் கொண்டவராக இருந்தாலும், தான் பெரிதும் மதிப்பவர்கள் தன்னை அவதூறாகப் பேசினால் அதை பொறுத்துக் கொள்ள முடியாதவராக இருந்தார். ஆயிரம் கருத்து பேதங்கள் இருந்தாலும், தான் மதிக்கும் ஒருவரை எப்போதும் மரியைதைக் குறைவாக அழைத்ததில்லை மணிவண்ணன். ஈழப் பிரச்சினையில் திமுக தலைவர் கருணாநிதியை தீவிரமாக விமர்சித்தாலும், அவரை எப்போதும் தலைவர் கலைஞர் என்றே குறிப்பிட்டு வந்தார் அத்தனை பேட்டிகளிலும். இயக்குநர் பாரதிராஜா மீதும் மணிவண்ணனுக்கு வருத்தங்கள் உண்டு. அவர் தன்னை நடத்திய விதம், அவரது அரசியல் நிலைப்பாடுகள் குறித்து மணிவண்ணன் எள்ளலுடன் பேசினாலும், ‘பாரதிராஜா என் தகப்பனைப் போன்றவர். அவரில்லா விட்டால் இன்று திரையுலகில் நான் இல்லை. என்னை இரண்டாம் முறை ஈன்றவர். அவருக்கு என் மீது அன்பிருக்கிறதோ இல்லையோ… எனக்கு எப்போதும் உண்டு. நான் ஏதாவது தவறாகப் பேசியிருந்தால்கூட மன்னிச்சிடுங்கப்பா,” என்று வெளிப்படையாகப் பேசியவர் மணிவண்ணன். ஆனால் பாரதிராஜாவுக்கோ அந்த பெருந்தன்மை துளியும் இல்லை. தன்னைவிட 20 வயது இளையவரான மணிவண்ணன் பற்றி பாரதிராஜா சமீபத்தில் ஆனந்த விகடனில் எழுதியிருந்ததைப் படித்த அத்தனைப் பேருமே முகம் சுளித்ததோடு, பாரதிராஜாவை சரமாரியாகத் திட்டித் தீர்த்தனர். அத்தனை கேவலமான எழுத்து. இதைப் படித்த மணிவண்ணன் எந்த எதிர்வினையும் காட்டவில்லை. அவரிடம் பலரும் கருத்துக் கேட்க முயன்றனர். கடந்த இரு தினங்களாக இடைவிடாமல் ஒலித்துக் கொண்டிருந்தது அவரது அலைபேசி. ஆனால் அவர் யாருக்கும் பதிலோ விளக்கமோ சொல்லவில்லை. ஏற்கெனவே இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவரை இந்த மனஅழுத்தமே கொன்றுவிட்டது என்பதுதான் பேச்சாக உள்ளது. யாகாவாராயினும் நாகாக்க என அய்யன் சொன்னதை பாரதிராஜாக்கள் மறந்துவிடுகிறார்களே!!