சென்னை : தொழில் நுட்பம் நாளுக்கு நாள் அதிவேகமாக வளர்ந்து வருகிறது. அதிலும், இணைய தளத்தின் பயன்பாடு அதிகரித்து விட்டது. பல மணி நேரம் வலைத்தளங்களிலேயே மூழ்கி கிடப்பவர்கள் ஏராளம். அதிலும், சமூக வலைதளங்களான பேஸ்புக், ஆர்குட், கூகுள் உள்ளிட்டவை வந்தபிறகு, நட்பு எல்லை விரிவடைந்து விட்டது. அடுத்த நாட்டை சேர்ந்தவர்கள் கூட இதன்மூலம் எளிதாக நண்பர்களாகி விடுகின்றனர். தங்கள் கருத்துக்களையும் இதன்மூலம் பரிமாறிக்கொண்டு வருகின்றனர். கருத்துக்களை பரிமாறிக்கொள்ள பயன்படுத்தப்பட்டு வந்த இந்த வலைத்தளங்கள், தவறாகவும் பயன்படுத்தப்படுகின்றன. உலகம் முழுவதும் உள்ள பேஸ்புக் உறுப்பினர்களில் 8 கோடி பேர் போலியான பெயர்களில் செயல்பட்டு வருவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சமூகத்தில் பிரச்னைகளும், குற்றங்களின் எண்ணிக்கையும் பெருக இணையத்தில் கிடைக்கும் கட்டுப்பாடற்ற சுதந்திரம் ஒரு முக்கிய காரணம் என்று கருதப்படுகிறது. இந்த வலைத்தளங்களில் பெயர், முகவரி, வயது, வேலை, சம்பளம், கல்வி தகுதி உள்ளிட்ட பல தகவல்கள் உண்மைக்கு மாறாக சிலர் பதிவு செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை நம்பி இளைஞர்கள் வலையில் விழும் பெண்கள் இறுதியில் ஏமாந்து அவல நிலைக்கு ஆளாகின்றனர். பின்னர் அவர்களின் வாழ்க்கையே கேள்விக்குறியாகி விடுகிறது. சிலர் தங்களுக்கு பிடிக்காத பெண்களின் செல்போன் எண்களை பாலியல் ஆசையை தீர்க்க வேண்டுமா? என்பது போன்ற வாசகங்களுடன் பதிவு செய்து பழிவாங்கி விடுகின்றனர்.
இந்தியாவில் 20 கோடிக்கும் மேலான ஆபாச வீடியோக்கள், சி.டிக்கள் இணையதளங்கள் வழியாக தங்கு தடையின்றி புழங்குவதாக கூறப்படுகிறது. செல்போன்களிலும் இந்த சமூகவலைத்தளங்கள் பார்க்க முடியும் என்பதால், இளம் தலைமுறையினர் வெகுவாக பாதிக்கப்படுகின்றனர். சென்னையை பொறுத்தவரை பேஸ்புக் தொடர்பான புகார்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வர ஆரம்பித்துள்ளன. ஆனால், பெரும்பாலான நேரங்களில் ஏமாற்றப்பட்டவர்கள் பலர் புகார் அளிக்க முன்வருவது இல்லை. இதனால் இணைய தளத்தில் வருவதை அப்படியே நம்பி வாழ்க்கையை தொலைக்க வேண்டாம் என்று போலீசார் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
மாதத்துக்கு 10 புகார்: பேஸ் புக் தொடர்பான புகார்கள் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு தினமும் வந்த வண்ணம் உள்ளன. மாதத்திற்கு குறைந்தது 10 புகாராவது வருகிறது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் போலீசாருக்கு உடனடி உத்தரவு பிறப்பிக்கிறார்.
அதன்படி, சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையில் இறங்குகின்றனர். அனைத்து விசாரணையும் மறைமுகமாகவே நடக்கிறது. காரணம் புகார் அளிப்பவர்கள் ஏமாற்றப்பட்டிருப்பது அல்லது மோசடி செய்யப்பட்டிருப்பது வெளியே தெரிந்தால் அவமானம் என்று நினைக்கின்றனர். சிலர் தற்கொலை செய்து கொள்ளும் நிலைமை வரை செல்கின்றனர். இதனாலேயே விசாரணை மறைமுகமாக நடக்கிறது.
அதிகம் ஏமாறுவது பெண்கள் சராசரியாக 50 புகார்கள் வாபஸ்
சென்னை போலீஸ் சைபர் கிரைம் உதவி கமிஷனர் ஜான்ரோஸ் கூறுகையில், “பேஸ் புக் மோசடியில் ஏமாந்து புகார் அளிப்பவர்கள் பெரும்பாலானோர் இளம் பெண்கள். இவர்களை பற்றி தெரிந்த நபர்களே ஆபாசமாக சித்தரிக்கின்றனர். தெரிந்தவர்கள் குற்ற செயல்களில் ஈடுபடும்போது நடவடிக்கை வேண்டாம் என்று சில பெண்கள் புகாரை வாபஸ் வாங்குகின்றனர். 50 சதவீதத்திற்கும் மேலான புகார்கள் வாபஸ் பெறப்படுகிறது. யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்டவர்கள் ஒத்துழைக்க வேண்டும். அப்போதுதான் எங்களால் கடுமையான நடவடிக்கை எடுக்க முடியும். இணையதள குற்றங்களை கண்டுபிடிக்க தொழில் நுட்பம் எங்களிடம் உள்ளது’’ என்றார்.
தடை செய்ய கோரிக்கை
இந்திய தகவல் தொழில் நுட்ப சட்டம், இந்திய ஒப்பந்த சட்டம் ஆகியவற்றின்படி 18 வயதுக்குட்பட்டவர்கள் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் உறுப்பினராக முடியாது. ஆனால் சிறார்கள் எந்த தடையும் இன்றி சமூக வலைத்தளங்களில் இணைய முடிகிறது. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்த பின், ஆபாச இணையதளங்களை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
சமூக ஆர்வலர் பேட்டி
சைபர் சொசைட்டி ஆப் இந்தியா அமைப்பின் தலைவர் ராஜேந்திரன் கூறுகையில், “தேவை இல்லாத ஆபாச வெப்சைட்டை பார்க்கும் சில மாணவர்கள் அதற்குள் சென்று விடுகின்றனர். பெற்றோர்களும் அவர்களை கண்காணிக்க முடிவது இல்லை. பேஸ் புக் முகவரிக்கு செல்லும் பல மாணவர்கள் தங்களது பெயரை மாற்றி உறுப்பினர்களாக இருக்கின்றனர். போலி உறுப்பினர்களுடன் நண்பர்களாக பழகி ஏமாற்றப்படுகின்றனர். எனவே இவற்றை கட்டுப்படுத்தவும், கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.