திண்டுக்கல் மாவட்ட தி.மு.க. சார்பில், தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 90வது பிறந்த நாள் விழா மற்றும் தேர்தல் நிதியளிப்பு பொதுக்கூட்டம் திண்டுக்கல் ஆர்.எம்.காலனியில் நடந்தது. கூட்டத்தில் மாநில தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-
பாராளுமன்ற தேர்தலுக்காக, ஒவ்வொரு மாவட்டத்திலும் போட்டி போட்டு தேர்தல் நிதியை வழங்கி வருகிறார்கள். தேர்தல் நிதி அதிகமாக வழங்கியதில், இந்த நிமிடம் வரை திண்டுக்கல் மாவட்டம் தான் முதலிடத்தை பெற்று உள்ளது என்பதை பெருமையோடு தெரிவிக்க விரும்புகிறேன்.
கடந்த 1967ம் ஆண்டில், முதல் பொதுத்தேர்தலை தி.மு.க. சந்தித்தபோது, அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்த ரூ.10 லட்சம் நிதி தேவையாக இருப்பதாக அண்ணா கூறினார். அப்போது தி.மு.க. பொருளாளராக இருந்த தலைவர் கருணாநிதி, தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து ரூ.11 லட்சம் வசூலித்து கொடுத்தார்.
அதே பொருளாளர் பதவியில் இருந்து, நான் கடமையை நிறைவேற்றி வருகிறேன். பாராளுமன்ற தேர்தல் நிதி திரட்டும் பணி தொடங்கிய நாள் முதற்கொண்டு, என்னுடன் புகைப்படம் எடுத்து கொள்பவர்களிடம் தேர்தல் நிதி வசூலிக்கும் விதிமுறையை பின்பற்றி வருகிறேன்.
தமிழகத்தின் 150 ஆண்டு கால கனவு திட்டமான சேதுசமுத்திர திட்டத்தை நிறைவேற்றினால் தி.மு.க.வுக்கும், கருணாநிதிக்கு பெயர் கிடைத்து விடும் என்ற நோக்கத்தில், அந்த திட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா மனு தாக்கல் செய்திருக்கிறார். இதேபோல் புதிய தலைமை செயலகம் கட்ட வேண்டும் என்று ஜெயலலிதா அறிவித்தார்.
ஆனால் அதற்கான முயற்சியை அவர் மேற்கொள்ளவில்லை. தி.மு.க. ஆட்சி காலத்தில் புதிதாக தலைமை செயலகம் கட்டப்பட்டது. அந்த கட்டிடம் அண்ணா அறிவாலயத்தின் கிளை அலுவலகமோ, கருணாநிதியின் சொந்த கட்டிடமோ இல்லை. அது, மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்டதாகும். அந்த கட்டிடத்தை முடக்கி விட்டார்.
உச்சநீதிமன்ற தீர்ப்பின் காரணமாக அண்ணா நூலகம் காப்பாற்றப்பட்டிருக்கிறது. இதேபோல் உச்சநீதிமன்ற தீர்ப்பினால், சமச்சீர் கல்வி திட்டத்தை எதுவும் செய்ய முடியவில்லை. ஏழைபணக் காரர் பாகுபாடின்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் ஒரே கல்வி கிடைத்து வருகிறது.
இதுமட்டுமின்றி 10ம் வகுப்பு தேர்வில் இந்த ஆண்டு 9 பேர் முதலிடத்தையும், 52 பேர் 2வது இடத்தையும், 137 பேர் 3வது இடத்தையும் கைப்பற்றி இருப்பதற்கு சமச்சீர் கல்வியே காரணம் ஆகும். கடந்த 2 ஆண்டு கால ஆட்சியில் விரல் விட்டு சொல்லும் அளவுக்கு அ.தி.மு.க. அரசு எந்த சாதனையையும் செய்யவில்லை.
தி.மு.க. ஆட்சி காலத்தில் 2 மணி நேரம் மட்டுமே மின்வெட்டு இருந்தது. ஆனால் தற்போது 18 மணி நேர மின்வெட்டு அமலில் உள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தல் அறிக்கையின் 7வது பக்கத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மின்வெட்டை முற்றிலும் நீக்குவோம் என்று அ.தி.மு.க. வினர் குறிப்பிட்டு இருந்தனர்.
ஆனால் இதுவரை மின்வெட்டு பிரச்சினைக்கு தீர்வு காணவில்லை. மின்சாரத்தை பற்றி பேசுவதற்கு சட்டமன்றத்தில் அனுமதி அளிப்பதில்லை. மின்சாரம் என்றவுடன், அவர்களுக்கு `ஷாக்` அடிக்கிறது. கடந்த ஆட்சி காலத்தைவிட, தற்போது 2 மடங்கு குற்றசம்பவங்கள் அதிகரித்துள்ளன. திண்டுக்கல் மாவட்டத்திலும் பட்டப்பகலில் பல்வேறு குற்றசெயல்கள் நடந்துள்ளன.
ஆதாரங்களை கையில் வைத்து கொண்டு நான் பேசுகிறேன். என்மீது வழக்கு போட்டாலும் அதை சந்திப்பேன். பொய் வழக்குகள் போட்டு தி.மு.க.வை ஒடுக்க முடியாது. பீனிக்ஸ் பறவையை போன்ற இயக்கமாக தி.மு.க. விளங்குகிறது. கருணாநிதியின் பிறந்த நாளில், வருகிற பாராளுமன்ற தேர்தல் மற்றும் அடுத்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற சபதம் ஏற்போம்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
முன்னதாக பாராளுமன்ற தேர்தல் நிதியாக ரூ. 6 கோடியே ஒரு லட்சம் வழங்கப்பட்டது.