தி.மு.க. இளைஞர் அணி துணை செயலாளர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 90-வது பிறந்த நாளையொட்டி மு.க. ஸ்டாலின் அறிவுரைப்படி ‘வரலாறாய் வாழ்பவர்’ என்ற தலைப்பில் கவிதைப் போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டிக்காக மரபு கவிதைகள், புதுக்கவிதைகள், வசன கவிதைகள் என மொத்தம் 2778 கவிதைகள் வந்தன.
இந்த கவிதைகளை சொற்கோ, இளையகம்பன், தமிழமுதன், தாயகம் கவி, மா.அன்பரசன் ஆகியோரை கொண்ட குழு பரிசீலித்தது. இதில் திண்டுக்கல்லைச் சேர்ந்த முருகு என்பவர் எழுதிய கவிதை முதல் பரிசுக்குரிய கவிதையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு ரூ. 1 லட்சம் வழங்கப்படும். தேவகோட்டை கவிஞர் ஆதிக்கு 2-ம் பரிசு ரூ. 50 ஆயிரம் வழங்கப்படுகிறது. சென்னையைச் சேர்ந்த இசபெல்லாவின் கவிதை மூன்றாம் பரிசாக ரூ. 25 ஆயிரம் பெறுகிறது. ஜீவா, கலைவாணி, சோமஸ் கந்தன், விமல், தமிழ்த் தாய், சாயபுமரைக்கா யர், முத்துலட்சுமி, இளங் கோவன், மல்லியப்பன், சுடர்நிலவன், மானூர் புகழேந்தி ஆகியோரது கவிதை கள் ஆறுதல் பரிசாக தலா ரூ. 5 ஆயிரம் பெறுகிறது.
பரிசளிப்பு விழா அடுத்த மாதம் (ஜூலை) 7-ந்தேதி மாலை 5 மணிக்கு ராணி சீதை மன்றத்தில் நடக்கிறது. பரிசு பெற்ற கவிதைகள் தவிர 77 சிறந்த கவிதைகளை தேர்வு செய்து 90 கவிதைகள் நூல் வடிவில் வெளியிடப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.