திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மற்றும் அதன் சுற்றுப்புர பகுதிகளில் நாட்டின் பல்வேறு முன்னணி நிறுவனங்கள், ஆலைகளுக்கு சொந்தமான 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காற்றாலைகள் இயங்கி வருகின்றன. பல்வேறு கம்பெனிகளில் தயாரிக்கப்படும் இந்த காற்றாலைகள் ரூ.1 கோடி முதல் 3 கோடி ரூபாய் வரை மதிப்புடையவை.
காற்றாலைகளின் பராமரிப்பு பணிகளை அதனை தயாரித்த நிறுவனங்களின் பொறியாளர்களே மாதம் ஒரு முறை செய்ய வேண்டும். இப்பணிகளை செய்வதில் மெத்தனம் காட்டப்படுவதால் 2 ஆண்டுகளில் மட்டும் 13 காற்றாலைகள் கீழே விழுந்தும், வெடித்து சிதறியும் விபத்துகளை ஏற்படுத்தி கிராம மக்களை நிம்மதியிழக்க செய்துள்ளன.
தாராபுரத்தை அடுத்துள்ள கொட்டமுத்தாம்பாளையம் பகுதியில் ஈரோடு தனியார் நூற்பு ஆலை நிறுவனத்துக்கு சொந்தமான 750 கிலோ வாட் திறன் கொண்ட காற்றலை இருந்தது. இப்பகுதியில் வீசும் பலத்த காற்று மற்றும் பராமரிப்பு இன்மை போன்ற காரணங்களால் நேற்று மாலை காற்றாலை எந்திரம் கட்டுப்பாட்டை இழந்து அசுர வேகத்தில் சுற்றத் தொடங்கியது.
தகவலறிந்து காற்றாலை நிறுவன ஊழியர்கள் விரைந்து வந்தனர். எந்திரத்தை கட்டுப்படுத்த முயன்றனர். அவர்களால் முடியவில்லை. எனவே அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். நிலைமையின் விபரீதத்தை ஏற்கனவே உணர்ந்திருந்த கொட்டமுத்தாம்பாளையம் காலனி மக்கள் கால்நடை மேய்த்துக் கொண்டிருந்தவர்கள், விவசாய வேலை செய்து கொண்டிருந்த பெண்கள் என அனைவரும் இடத்தை காலி செய்து ஓட்டம் பிடித்தனர்.
அடுத்த சில நிமிடங்களில் பயங்கர வெடி சத்தத்துடன் புகை மற்றும் நெருப்பை கக்கியவாறு காற்றாலை எந்திரம் வெடித்து சிதறியது. எந்திரத்தின் இரும்பு உருளைகள், கியர் ராடுகள், பைபர் இறக்கைகள் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு வீசி எறியப்பட்டன.
பீரங்கி குண்டுகளைப் போல் வந்து விழுந்த இரும்பு துண்டுகளின் வேகத்தில் அருகில் இருந்த பண்ணை வீட்டின் சிமெண்டு மேற்கூரைகள், மின் வாரியத்துக்கு சொந்தமான 2 மின் கம்பகங்கள் சேதமடைந்தன. இதனால் அந்த பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. காற்றாலை எந்திரம் வெடித்து சிதறிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.