சென்னை: பிராய்லர் கோழி உற்பத்தியாளர்கள் செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தி விலையை அதிகரித்து வருவதாக குற்றம் சாட்டி, கோழிக்கறி விற்பனையை நிறுத்தி நேற்று தொடங்கிய ஸ்டிரைக் இன்றும் நீடித்ததால் மக்கள் இன்று கோழிக்கறி சாப்பிட முடியாமல் தவிப்புக்குள்ளாகினர். கோழி இல்லாததால் ஆட்டுக்கறிக்கும், மீனுக்கும் மக்கள் தாவினர். ஆனால் இவற்றின் விலை அதிகமாக இருந்ததால் மக்கள் டென்ஷனாகி விட்டனர். பிராய்லர் கோழி முட்டை விலையும் கூட இன்று உயர்ந்து காணப்பட்டது. சென்னையில் நேற்று கோழிக்கறிக் கடைகள் திடீர் ஸ்டிரைக்கில் இறங்கின. அதாவது கோழிக்கறி விற்பனையைப் புறக்கணித்தனர் வியாபாரிகள். பிராய்லர் கோழி உற்பத்தியாளர்கள் வேண்டும் என்றே உற்பத்தியைக் குறைத்து விட்டு செயற்கையான பற்றாக்குறையை ஏற்படுத்தி, விலையை உயர்த்துவதாக கோழிக்கறி விற்பனையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதன் காரணமாக கடந்த சில வாரங்களாக கோழிக்கறி விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனால் பொதுமக்களுக்குத் தங்களால் பதில் சொல்ல முடியவில்லை என்பது வியாபாரிகளின் குற்றச்சாட்டாகும். இந்த ஸ்டிரைக் காரணமாக சென்னையில் நேற்று கோழிக்கறி விற்பனை சுத்தமாக பாதிக்கப்பட்டது. ஆனால் நேற்று ச னிக்கிழமை என்பதால் பெரிய அளவில் பாதிப்பு தெரியவில்லை. அதேசமயம், ஞாயிற்றுக்கிழமையான இன்றுதான் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். பையைத் தூக்கிக் கொண்டு கோழிக்கறி வாங்கக் கிளம்பியவர்களுக்கு கோழிக்கறி கிடைப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. பெரும்பாலான இறைச்சிக் கடைகளில் கோழிக்கறி இல்லை என்று கூறப்பட்டதால் மக்கள் ஏமாற்றத்திற்குள்ளாகினர். கோழிக்கறிக்குப் பதில் ஆட்டுக்கறிக்கு மக்கள் மாற வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் அதன் விலையும் உயர்ந்து காணப்பட்டது. ஒரு கிலோ ஆட்டுக்கறி ரூ. 440 முதல் 480 வரை விற்றது. மீன் விலையும் கூட இன்று உயர்ந்தே காணப்பட்டது. அதேபோல கோழி முட்டை விலையும் உயர்ந்திருந்தது. இது 2 நாள் ஸ்டிரைக்தான். எனவே நாளை முதல் மீண்டும் கோழிக்கறி விற்பனை தொடங்கும் என வியாபாரிகள் கூறியுள்ளனர்.