கோவை: தமிழக கேரள எல்லையில் உள்ள தனியார் வாளையார் சோதனை சாவடியில் கால தாமதம் ஏற்படுவதாக கூறி இன்று நள்ளிரவு முதல் கேரளாவிற்கு செல்லும் லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை அடுத்த வாளையார் பகுதியில் கேரள அரசின் வாகன சோதனை சாவடிகள் அமைந்துள்ளது. போக்குவரத்து, வணிக வரி, என அடுத்தடுத்து சோதனை சாவடிகள் உள்ளது. இந்த சோதனை சாவடி வழியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஜவுளி பொருட்கள், முட்டை, கோழி உள்ளிட்டவை சரக்கு லாரிகள் மூலம் மற்ற மாநிலங்களுக்கு செல்லகின்றன.
நாள்தோறும் ஆயிரக்கணக்கான லாரிகள் சோதனை சாவடி வழியாக செல்ல வேண்டியிருப்பதால் அவற்றின் ஆவணங்களை சரி பார்ப்பதில் கால தாமதம் ஏற்படுகிறது. இந்தியாவிலிருந்து 31 மாநிலங்களை சேர்ந்த லாரிகள் இந்த வாளையார் சோதனை சாவடிகளை கடந்து செல்ல வேண்டியிருப்பதால் லாரி உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக கேரள அரசிற்கு பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் இன்று நள்ளிரவு முதல் கேரளாவிற்கு செல்லும் லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.