தருமபுரி இளவரசன் மரணத்தில் உண்மை நிலையை அறியும் வகையில் உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.ஆர்.சிங்காரவேலு தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணயக் குழுவின் தலைவராகவும் நீதிபதி சிங்காரவேலு செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தருமபுரி சம்பவம் குறித்து விசாரணை ஆணையம் அமைக்க உத்தரவிட்டுள்ள முதல்வர் ஜெயலலிதா, அந்தச் சம்பவத்தில் அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை விளக்கி திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
கலப்புத் திருமணம் செய்து கொண்ட இளைஞர் இளவரசன், தருமபுரி அரசு கலைக் கல்லூரியின் பின்புறத்தில் உள்ள ரயில்வே இருப்புப் பாதையில் கடந்த 4-ஆம் தேதி இறந்த நிலையில் காணப்பட்டார். மிகுந்த மன வேதனையும் அதிர்ச்சியும் அளித்துள்ள இளவரசனின் இறப்பு குறித்து பல்வேறு கருத்துகள் ஊடகங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன.
சமூக ஆர்வலர்களும், தனி நபர்களும், பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள். இறந்த இளவரசனின் தந்தை இளங்கோவன், தனது மகன் இறப்பில் சந்தேகங்களை எழுப்பியுள்ளார். எனவே, இளவரசன் இறப்பின் உண்மை நிலையை அறியும் வகையில், உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.ஆர்.சிங்காரவேலு தலைமையில் ஒரு விசாரணை ஆணையம் அமைக்கப்படும்.
அரசின் தொடர் நடவடிக்கைகள்: தருமபுரி மாவட்டத்தில் இளவரசன்-திவ்யா கலப்பு திருமணத்தைத் தொடர்ந்து, திவ்யாவின் தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால், இருவேறு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டு நத்தம் காலனி, அண்ணா நகர், கொண்டாம்பட்டி பகுதி மக்களின் வீடுகள் மற்றும் உடைமைகள் சேதப்படுத்தப்பட்டன. தீயிட்டு கொளுத்தப்பட்டன.
பாதிப்புக்குள்ளான மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் தமிழக அரசால் வழங்கப்பட்டன. தாற்காலிக தங்குமிடம் ஏற்பாடு செய்யப்பட்டதுடன், நிரந்தர தங்குமிடமும் கட்டிக் கொடுக்கப்பட்டது. குடிநீர் வசதிகள், பாடப் புத்தகங்கள், சீருடைகள் ஆகியனவும் வழங்கப்பட்டன. பாதிக்கப்பட்ட 326 ஆதிதிராவிடர் குடும்பங்களுக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.50 ஆயிரம் என ரூ.1.63 கோடி அளிக்கப்பட்டது.
மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் நிவாரணமாக ரூ.7.32 கோடி வழங்கப்பட்டுள்ளது. 99 பேருக்கு பசுமை வீடுகள் கட்டித் தர ரூ.2.68 கோடி அனுமதிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான மறுவாழ்வுப் பணிகளை தமிழக அரசு உடனடியாக மேற்கொண்டதன் காரணமாகவும், அரசு உத்தரவாலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விரைவில் இயல்பு நிலை திரும்பியது.
சி.பி.சி.ஐ.டி. விசாரணை: தருமபுரி வன்முறைச் சம்பவம் தொடர்பாக கிருஷ்ணாபுரம் காவல் நிலையத்தில் தாக்கல் செய்யப்பட்ட புகார்கள் குறித்து புலன் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்த சூழ்நிலையில், வழக்கின் தன்மையைக் கருத்தில் கொண்டு அந்தப் புகார்கள் அனைத்தும் சி.பி.சி.ஐ.டி., பிரிவுக்கு மாற்றப்பட்டன. அந்தத் துறையினர் தீவிர புலன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்று முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.