அவ போகட்டும் மாமா, நான் இருக்கேன்.. மணமகள் ஓடியதால் தவித்த மணமகனை கைப்பிடித்த உறவுப் பெண்!

அவ போகட்டும் மாமா, நான் இருக்கேன்.. மணமகள் ஓடியதால் தவித்த மணமகனை கைப்பிடித்த உறவுப் பெண்!

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே மத்திகிரி பகுதியில் திருமண நாளன்று மணமகள் ஓடி விட்டதால் தவித்துப் போனார் மணமகன். இதைப் பார்த்து வேதனை அடைந்த உறவுக்காரப் பெண் ஒருவர் அவரை திருமணம் செய்து கொள்ள முன்வந்ததால் திருமண விழாவில் சந்தோஷம் மீண்டும் விசிட் அடித்து விசில் அடித்தது. மத்திகிரி இடையநல்லூரை சேர்ந்தவர் முனியப்பன். இவரது மனவி ஜெயம்மா. ஜெயாம்மா. இவர்கள் மகன் ரவி.30 வயதான ரவி எலக்ட்ரீசியனாக இருக்கிறார். இவருக்கும் ஷோபா என்பவருக்கும் திருமணம் நிச்சயம் செய்தனர். நேற்று காலை, ஓசூர் என்.ஜி.ஜி.ஓ.எஸ்., காலனியில் உள்ள திருப்பதி திருமலை தேவஸ்தான திருமண மண்டபத்தில், திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதல் நாள் இரவு வரவேற்பும் நடந்தது. வரவேற்பின்போது ஒரு திடீர் திருப்பம் ஏற்பட்டது. அதாவது மணமகள் ஷோபா, சினிமாவில் வருவது போல, கழுத்தில் கிடந்த மாலையைக் கழற்றி கீழே போட்டு விட்டு எனக்குத் திருமணம் பிடிக்கவில்லை, நான் கட்டிக்க மாட்டேன் என்று கூறி விட்டு விசுக்கென போய் விட்டார். இதனால் பெரும் பரபரப்பும் அதிர்ச்சியும் ஏற்பட்டது. உறவினர்கள், இரு வீட்டார் சேர்ந்து மணமகளிடம் என்னஏது என்று பேசிப் பார்த்தனர். ஆனால் அவர் பிடி கொடுக்கவில்லை. திருமணம் செய்யும் எண்ணம் எனக்கு இல்லை. பெற்றோர்தான் கட்டாயப்படுத்தி சம்மதிக்க வைத்தனர். ஆனால் எனக்கு இதில் துளியும் விருப்பம் இல்லை. மீறி கட்டி வைத்தால் நான் வாழ மாட்டேன் என்று கூறி விட்டு மண்டபத்தை விட்டும் வெளியேறினார். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ரவிக்கு கண்களில் கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது. அவரது நிலையைப் பார்த்து அத்தனை பேருக்கும் துக்கமாகி விட்டது. இந்த நிலையில் திருமணத்திற்கு வந்திருந்த உறவுக்காரப் பெண் கீதாவை ரவிக்கு கட்டி வைக்கலாம் என்று முடிவானது. கீதாவும் மனமுவந்து சம்மதம் தெரிவித்தார். அவரது குடும்பத்தினரும் சம்மதித்தனர். இதையடுத்து மறுபடியும் வரவேற்பு தொடங்கியது. கீதாவையும், ரவியையும் அனைவரும் வாழ்த்தினர். பின்னர் நேற்று திருமணம் சிறப்பாக நடந்தேறியது. ஷோபாவை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும் – பிடிக்காத திருமணத்தை துணிச்சலாக நிறுத்தி விட்டுப் போன அவரது செயல் பாராட்டுக்குரியதுதான். இல்லாவிட்டால் நாளை தேவையில்லாத செய்திகள் வந்து இரு குடும்பத்துக்கும் கஷ்டமாகி விடுமே.. அதைத் தவிர்த்ததற்காக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Connect with Facebook