சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பி.இ., பி.எஸ்சி. விவசாயம், பி.எஸ்சி. வேளாண் ஆகிய படிப்புகளுக்கான அனுமதி சேர்க்கை கலந்தாய்வு இன்று தொடங்கி 7-ம் தேதி வரை நடைபெறுகிறது.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., பி.பி.டி., பி.பார்ம், பி.எஸ்சி. நர்சிங், பி.இ., பி.எஸ்சி. விவசாயம், பி.எஸ்சி. தோட்டக்கலை ஆகிய படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு கடந்த மாதம் நடைபெற்றது.
தமிழக அரசு இடஒதுக்கீட்டு விதி மற்றும் தரவரிசை அடிப்படையில் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூன் 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
இதையடுத்து பி.இ. படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடங்கி 7-ம் தேதி வரையும், வேளாண் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 8-ம் தேதி தொடங்கி 12-ம் தேதி வரையும் நடைபெறுகிறது.
பி.இ. படிப்புக்கு 2800 பேரும், பி.எஸ்சி. வேளாண்மை, பி.எஸ்சி. தோட்டக் கலைப் படிப்புகளுக்கு 1500 பேரும் சேர்க்கப்படுவர். 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த பட்டப்படிப்புகள் மற்றும் கலை மற்றும் அறிவியல் முதுகலைப் பட்டபடிப்புகள் உள்ளிட்ட இதர படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூலை 5-ம் தேதி ஆகும்.
அதற்கான விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. கலந்தாய்வுக்கான ஏற்பாடுகளை பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா தலைமையில் பதிவாளர் (பொறுப்பு) என்.பஞ்சநதம், மாவட்ட வருவாய் அதிகாரிகள் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், டி.கிருஸ்துராஜ் ஆகியோர் செய்துள்ளனர்.