திண்டுக்கல் மாவட்டத்தில் இந்தாண்டு பயிர் காப்பீடு செய்ய இதுவரை 77 விவசாயிகள் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்.
மாறி வரும் பருவநிலை, வெள்ளம், வறட்சி, பூச்சி மற்றும் நோய் தாக்குதல் போன்ற இயற்கை இடர்பாடுகளால் விவசாயிகள் பெரிய அளவில் பாதிக்கப்படுகின்றனர். இதை தடுக்க விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய மத்திய மற்றும் மாநில அரசுகள் வலியுறுத்தின.
[amazon_link asins=’B01MT0QKAG,B01DDP7D6W,B0756Z242J’ template=’ProductCarousel’ store=’dindigul-21′ marketplace=’IN’ link_id=’ab1e0aad-0c11-11e8-afbd-75b006cdd55f’]
கடந்த ஆண்டு ஏற்பட்ட வறட்சியால் தமிழகம் முழுவதும் ஏராளமான விவசாயிகள் ஆர்வமுடன் பயிர் காப்பீடு செய்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் 39 ஆயிரத்து 500 விவசாயிகள்
நெல், தென்னை மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு காப்பீடு செய்தனர்.
அதில் 413 நெல் விவசாயிகளுக்கு ரூ.1.10 கோடி, இதர விவசாயிகள் 3 ஆயிரம் பேருக்கு ரூ.1.96 கோடி என கூட்டுறவு சங்கங்களில் கடன் பெற்ற விவசாயிகளுக்கு மட்டும் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
அதே சமயம் ஆதார் எண், வங்கி கணக்கு எண் இணைப்புகளில் ஏற்பட்ட குழறுபடிகளால் காப்பீட்டுக்கான பணம் வந்தும், கைக்கு கிடைக்காமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
77 பேர் மட்டுமே
திண்டுக்கல்லில் காப்பீடு செய்த 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இன்னும் காப்பீடு தொகை கிடைக்கவில்லை. காப்பீடு செய்த விவசாயிகளின் பணத்தை விட, வறட்சியால் காப்பீடு கேட்டு அனுப்பியுள்ள நிவாரண தொகை அதிகம். இதனால், விவசாயிகளுக்கு பணத்தை கொடுக்க முடியாமல் காப்பீடு நிறுவனம் திணறி வருகிறது.
இதற்கிடையில் இந்தாண்டு பயிர் காப்பீடு செய்ய ஒவ்வொரு மாவட்டத்துக்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இலக்கை பூர்த்தி செய்ய வேளாண் மற்றும் தோட்டக்கலை துறை அதிகாரிகளுக்கு மேலிடத்தில் இருந்து அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இதனால் விவசாயிகளை அதிகாரிகள் வற்புறுத்தி வருகின்றனர்.
இந்தாண்டு காப்பீடு செய்ய பிப்.15., கடைசி நாள். ஆனால், ஏற்கனவே பயிர் காப்பீடு செய்தோர் நிலை கேள்விக்குறியாகியுள்ளதால், காப்பீடு செய்வதை விவசாயிகள் புறக்கணிக்கின்றனர். இதனால் திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு சங்கத்தில் கடன் பெற்றோர் 47 பேர், பெறாதவர்கள் 30 பேர் என மொத்தம் 77 விவசாயிகள் மட்டுமே காப்பீடுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
Source: http://www.dinamalar.com/district_detail.asp?id=1953825