கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த கணமூர் கிராமம் ஆந்திர எல்லையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் உள்ளது. இங்கு ஏராளமான வன விலங்குகள் உள்ளன.
நேற்று முன்தினம் கணமூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சுமார் 8 வயதுள்ள கரடி, நேரலக்கோட்டை காப்புக்காட்டை ஒட்டியுள்ள நிலப்பகுதிக்கு வந்தது. பின்னர் அங்குள்ள ஒரு மாந்தோப்பில் காவலாளி வெங்கடேசன் (40) மீது பாய்ந்து தாக்கியது. அக்கம்பக்கத்தினர் திரண்டு வரவே மாந்தோப்புகள் ஓடி மறைந்தது. வெங்கடேசன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
தகவலறிந்த வனத்துறையினர் வந்து மாந்தோப்பில் பதுங்கியிருந்த கரடியை பிடித்து வனப்பகுதியில் விடுவதற்காக விரட்டினர். இதனால் பயந்து ஓடிய கரடி, அங்கிருந்த தண்ணீர் இல்லாத கிணற்றில் விழுந்தது. சுமார் 2 மணி நேரம் போராடி வலைபோட்டு கரடியை வெளியே கொண்டு வந்தனர். வலையை விட்டு வெளியே குதித்த கரடி திடீரென ஆவேசமாக அருகில் நின்ற வனக்காப்பாளர் ரகமத்துல்லா மீது பாய்ந்து தலையில் கடித்தது. இதில் தலையிலிருந்து ரத்தம் கொட்டியது.
சக வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் கரடியை விரட்டினர். அந்த கரடி அருகில் உள்ள வனப்பகுதிக்குள் ஓடி விட்டது. அப்போது வனக்காவலர் ரமேஷ், கிணற்றில் தவறி விழுந்து படுகாயமடைந்தார். தகவலறிந்த கிருஷ்ணகிரி மாவட்ட வன அலுவலர் பாபு சம்பவ இடத்திற்கு வந்தார். இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதி பொதுமக்களிடையே பீதி நிலவுகிறது.