திருவனந்தபுரம்: கடந்த 22 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு கேரளாவில் கன ழை பெய்துள்ளது. இதனால், மீனவர்கள் தொடர்ந்து கடலுக்குள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை ஜூன் 1-ந்தேதி தொடங்கியது. பருவமழை தொடங்கிய நாள் முதற்கொண்டு கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளச் சேதமும், வீடுகள் இடிந்து விழும் அபாயமும் உண்டானது. மேலும் பல இடங்களில், மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. சில இடங்களில் தொடர் மிந்தடையும் காணப்படுகிறது. தொடர்ந்து கடலும் சீற்றத்துடனேயே காணப்படுகிறது. இதனால் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுவரை 93 செ.மீ. மழை கேரளாவில் பதிவாகி உள்ளது. இது வழக்கமான சராசரி 51 செ.மீ. மழையை விட மிகவும் அதிகமாகும். கடந்த 22 ஆண்டுகளுக்கு பிறகு கேரளா வில் தற்போதுதான் இந்த அளவுக்கு கனமழை பெய்துள்ளது. இதற்கு முன்பு கடந்த 91-ம் ஆண்டு கேரளாவில் இதேபோல கனமழை பெய்தது குறிப்பிடத்தக்கது. மழையின் வேகம் இன்னும் சில தினங்காளில் குறையும் என திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கனமழையின் காரணாமாக கேரளா முழுவதும் 1,829 வீடுகள் இடிந்து விழுந்து உள்ளதாகவும், அதிகபட்சமாக திருவனந்தபுரத்தில் 161 வீடுகள் இடிந்து விழுந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இதுவரை 23 பேர் பலியானதாக தகவல். குறிப்பாக. திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டை, காசர்கோடு பகுதிகள் மழையினால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகள் ஆகும்.