மதுரை: “மக்கள் பிரச்னை குறித்து பேசுவதற்குச் சென்றால், வடை, சோமாஸ், தண்ணீர் பாட்டிலை தூக்கி எறிந்து, அ.தி.மு.க.,வினர் தாக்குகின்றனர்’ என, மதுரை கலெக்டரிடம், தி.மு.க., கவுன்சிலர்கள், புகார் செய்தனர்.
மதுரை மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர், ராஜ் தலைமையில் கவுன்சிலர்கள், மதுரை கலெக்டரிடம் கொடுத்துள்ள புகார் மனு: மாநகராட்சி கூட்டங்களில், வார்டு குறைகளை, தி.மு.க., கவுன்சிலர்கள் பேச முடியவில்லை. அங்கு சென்றால், அ.தி.மு.க., கவுன்சிலர்கள், தகாத வார்த்தைகளால் திட்டி, தண்ணீர் பாட்டில், வடை, சோமாஸ்களை, எங்கள் மீது, வீசி, “மைக்’கை பிடுங்கி அடிக்கின்றனர்.
மாநகராட்சி செயல்பாடுகளை, விமர்சிப்போம் என, திட்டமிட்டு, தாக்கி வெளியேற்றுகின்றனர். கமிஷனரிடம், புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, கலெக்டர் நேரடியாகத் தலையிட்டு, தி.மு.க., கவுன்சிலர்கள், கூட்டத்தில் பேசுவதற்கு உதவ வேண்டும். கூட்டத்தில் எங்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டு உள்ளது.
மனுவை பெற்ற கலெக்டர், “”மாநகராட்சி கூட்டத்தில், “சஸ்பெண்ட்’ செய்யப்பட்டால் அது, அவை நடவடிக்கை. மாநகராட்சியில், ஊழல் நடந்திருந்தால், அதுகுறித்து எழுத்து மூலமாகப் புகார் அளித்தால் விசாரிக்கப்படும்,” என்றார்.