சென்னை : இருபத்தி எட்டு மாதங்களுக்கு பிறகு பூமியின் அருகில் நிலா வந்தது. இதனால், வழக்கத்தை விட நிலா 14 சதவீதம் பெரிதாக தெரிந்தது. இதை பொதுமக்கள் அதிசயமாக பார்த்து ரசித்தனர். பூமியின் நீள்வட்ட பாதையில் நிலா சுற்றி வருகிறது. பூமியை சுற்றிவர இருபத்தி ஒன்பதரை நாட்களை எடுத்துக் கொள்ளும். சில நாட்களில் 3 லட்சத்து 57 ஆயிரத்து 400 கி.மீட்டர் தூரத்திற்கு சுற்றிவரும். இதுவே, சில நேரத்தில் 4 லட்சத்து 60 ஆயிரத்து 400 கி. மீட்டர் தூரத்திற்கும் சுற்றி வரும். குறிப்பாக 28 மாதங்களுக்கு ஒரு முறை நிலா 3 லட்சத்து 57 ஆயிரத்து 400 கி.மீட்டர் தூரத்திற்கு சுற்றும். இப்படி வரும் நிலா வழக்கத்தை விட பெரியதாக தெரியும்.
இதேபோல், கடந்த 2 நாட்களாக இரவில் நிலா வழக்கத்தை விட, பெரிய அளவில் தெரிந்தது. இதை பொதுமக்கள் தங்கள் வீட்டு மாடிகளிலும் இருந்தும், உயரமான கட்டிடங்களில் இருந்தும் ரசித்து பார்த்தனர். இது குறித்து தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் விஞ்ஞானி அய்யம்பெருமாள் கூறுகையில், ‘‘நிலா, பூமியின் நீள்வட்ட பாதையில் சுற்றி வருகிறது. 28 மாதங்களுக்கு ஒரு முறை சுற்றி வரும்போது,
3 லட்சத்து 57 ஆயிரத்து 400 கி.மீட்டர் தூரத்திற்கு செல்லும். அப்போது, வழக்கத்தை விட, நிலா பெரிதாக தெரியும். ஆனால், நிலா அளவில் மாற்றம் ஏதும் இருக்காது. இதை ‘சூப்பர் மூன்’ என்பார்கள். குறிப்பாக 12 சதவீதத்தில் இருந்து 14 சதவீதம் பெரியதாக தெரியும். கடந்த 2 நாட்களாக (சனி, ஞாயிறு) இப்படி வானத்தில் தெரிகிறது. இதனால், எந்த பாதிப்பும் கிடையாது. அச்சப்பட தேவையில்லை. இதற்கு முன்பு 2011ம் ஆண்டு மார்ச் 11ல் இந்த சூப்பர் மூன் தெரிந்தது. இதையடுத்து, வரும் 2015ம் ஆண்டில் செப்டம்பர் மாதம் 29ம் தேதி இரவில் தெரியும்’’ என்றார்.