மும்பை: இந்தியாவில் இன்டர்நெட்டை பயன்படுத்தும் பெண்களின் எண்ணிக்கை 6 கோடி என ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. இவர்களில் சுமார் 2.4 கோடி பெண்கள் தினமும் தங்களது வேலையின் நிமித்தமாக இன்டர்நெட்டை பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.
சமீப காலமாக இந்தியாவில் இன்டர்நெட்டின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இ மெயில், ஷாப்பிங், சமூக வலைதளங்கள் என இன்டர்நெட் பயன்பாடு நாட்டு மக்களின் அனைத்து தரப்பினரிடையேயும் வெகுபிரபலமாகி வருகிறது. இந்நிலையில், கூகுள் நிறுவனம் நடத்திய ஆய்வு ஒன்றில் இந்தியாவில் இன்டர்நெட்டை பயன்படுத்தும் பெண்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, இந்தியாவில் இன்டர்நெட்டை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை 15 கோடியாகும். இவர்களில் சுமார் 40 சதவீதத்தினர் அதாவது 6 கோடி பேர் பெண்கள். இவர்களிலும் 2.4 கோடி பேர் தங்களது பணிகளின் நிமித்தமாக தினமும் இன்டர்நெட்டை பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.
இ மெயில், சமூக வலைதளங்கள் மற்றும் ஷாப்பிங் செய்வதற்காக பெண்கள் இன்டர்நெட்டை அதிகம் பயன்படுத்துவது ஆய்வில் தெரியவந்துள்ளது. இன்டர்நெட்டை அதிகம் பயன்படுத்தும் பெண்கள் இளைய வயதினராகவும், செல்வந்தர்களாகவும் இருப்பதாக அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. 2.4 கோடி இன்டர்நெட் உபயோகிப்பாளர்களில் 74 சதவீதத்தினர் 15 முதல் 34 வயதிற்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இ மெயில், சமூக வலைதளங்கள் தவிர, இசையை டவுன்லோடு செய்வது, கல்வி தொடர்பான தகவல்களை தேடுவது, வேலை தேடுவது, வீடியோக்கள் பார்ப்பது மற்றும் செய்திகளை தேடுதல் போன்ற பணிகளுக்காக பெண்கள் இன்டர்நெட்டை தேடுவது தெரியவந்துள்ளது. இவைகள் தவிர அழகு சாதன பொருட்கள் குறிப்பாக, சருமம் தொடர்பான பொருட்கள், தலைமுடி பராமரிப்பு, குழந்தை பராமரிப்பு மற்றும் உணவு தொடர்பாக பெண்களின் தேடல் இருப்பதாகவும் கூகுள் தெரிவித்துள்ளது.