புதுக்கோட்டை : பள்ளி மாணவர்கள், “லிப்ட்’ கேட்டு ஏறிச் சென்ற, மினி வேன் மீது, தனியார் பஸ் மோதியதில், ஏழு மாணவர்கள், சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
புதுக்கோட்டை டவுன் பகுதியில், பால் வினியோகம் செய்துவிட்டு, காலி பால் கேன்களுடன், “டாடா ஏஸ்’ மினி வேன், நேற்று காலை, 8:50 மணிக்கு, சென்று கொண்டிருந்தது. ஆறுமுகம் என்பவர் ஓட்டிச் சென்றார். உடன், அவரது உறவினர் தியாகராஜன், 45, இருந்தார். அந்த வழியாக, வல்லந்திராக்கோட்டை அரசு பள்ளிக்கு, செல்ல வந்த மாணவர்கள் சிலர், வேனை வழிமறித்து, “லிப்ட்’ கேட்டு, ஏறிக் கொண்டனர். அப்போது, எதிரே, வந்த தனியார் பஸ், மினி வேன் மீது, மோதியது.இதில், மினி வேன், சின்னாபின்னமாகி, 50 அடி தூரத்தில், தூக்கி வீசப்பட்டு, கண்மாய்க்குள் விழுந்தது. வேன் பின்புறம் நின்று, பயணம் செய்த ஏழு மாணவர்கள் மற்றும் வேன் டிரைவர் இறந்தனர். பலியான மாணவர்கள் அனைவரும், 12 வயதில் இருந்து, 17 வயதுக்கு உட்பட்டவர்கள்.
விபத்தில், இரண்டு மாணவர்கள் உட்பட, மூன்று பேர், பலத்த காயமடைந்து, தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.தனியார் பஸ் டிரைவர் பாலச்சந்திரன், 45, தப்பி ஓடிவிட்டார். தலைமறைவாக இருந்த அவரை போலீசார், கைது செய்துள்ளனர்.தனியார் பஸ்சில் பயணம் செய்தவர்கள், விபத்து நடந்ததும் அலறியடித்து இறங்கினர். ரத்த வெள்ளத்தில், மாணவர்கள் கிடந்ததைப் பார்த்து, பதைபதைத்து, ஓடினர். வயது முதிர்ந்த பெண் பயணிகள், ஓட முடியாமல், சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தனர். அவர்களுக்கு, அப்பகுதி மக்கள், தண்ணீர் கொடுத்து உதவினர்.
தனியார் பஸ்களுக்கு தடை:
புதுக்கோட்டை அருகே நடந்த விபத்துக்கு, தனியார் பஸ்சின் அசுர வேகம் தான், காரணம் என, போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, அப்பகுதி மக்களின் கோபம், தனியார் பஸ்கள் மீது திரும்பியுள்ளது. பஸ்கள் மீது, தாக்குதல் நடத்தப்படலாம் என, தகவலறிந்த புதுக்கோட்டை கலெக்டர் மனோகரன், புதுக்கோட்டையிலிருந்து, அறந்தாங்கிக்கு, தனியார் பஸ்கள் இயக்கத்துக்கு தடை விதித்துள்ளார். நேற்று காலை, 10:30 மணி முதல், அந்த வழியாக, தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை.
ஒரே இடத்தில் அடக்கம்:
விபத்தில் பலியானோரின் உடல்கள் வைக்கப்பட்டிருந்த, புதுக்கோட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில், பதற்றம் நிலவியது.பிரேத பரிசோதனை, பகல், 1:00 மணிக்கு முடிந்தது. இதையடுத்து, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட, மாணவர்களின் உடல்கள், சுடுகாட்டில், ஒரே இடத்தில், அடக்கம் செய்யப்பட்டன.பலியான மாணவர்களின் குடும்பங்களுக்கு, அரசிடம் உரிய நிவாரணம் பெற்றுத் தரப்படும் என, கலெக்டர் உறுதியளித்தார்.
யார் “லிப்ட்’ கேட்டாலும்… :
விபத்தில், உயிரிழந்த வேன் டிரைவர் ஆறுமுகம், யார், “லிப்ட்’ கேட்டாலும், வேனில் ஏற்றி வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.அண்மையில், மினி வேன் வாங்கி, பயன்படுத்தி வந்தார். வியாபாரத்தை முடித்து, திரும்பும்போது, வழியில், யார், “லிப்ட்’ கேட்டாலும், உதாசீனப்படுத்தாமல், வாகனத்தில் ஏற்றிச் செல்வதை, வழக்கமாகக் கொண்டிருந்தார். நேற்று காலை, ஒன்பது பேரை ஏற்றிச் சென்றபோது, விபத்து நடந்துள்ளது.இவ்விபத்தில் இறந்த, ஏழு பள்ளி மாணவர்கள், வாகன ஓட்டுனர், ஆகியோரின் குடும்பத்திற்கு, தலா ஒரு லட்சம் ரூபாய், பலத்தக் காயமடைந்தவர்களுக்கு, தலா, 25 ஆயிரம் ரூபாய், சாதாரண காயமடைந்தவர்களுக்கு, தலா, 10 ஆயிரம் ரூபாய் வழங்க, முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.