செஞ்சி:செஞ்சி அருகே, தனியாக வசிக்கும், 100 வயது கடந்த தம்பதியர், தங்கள் உணவை தாங்களே சமைத்து, அனைவரையும் அசத்தி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், ஜம்போதி கிராமத்தை சேர்ந்தவர், ரங்கசாமி. 130 வயது எனக் கூறும் இவருக்கு, 2005ல் வழங்கியுள்ள ரேஷன் கார்டின்படி, 123 வயதாகிறது. இவர், மனைவி சடைச்சியம்மாள், 108. இவருக்கு, மூன்று மகன்கள், 10 பேரன், 3 பேத்திகள், 12 கொள்ளு பேரன், 12 கொள்ளு பேத்தி, ஒரு எள்ளு பேரன், ஒரு எள்ளு பேத்தி உள்ளனர்.கணவன், மனைவி வெற்றிலை போடுவர். ரங்கசாமியின் பற்கள் கரைபடிந்துள்ள போதிலும் விழவில்லை; கைத்தடி உதவியுடன் நடக்கிறார். இருவருக்கும் பார்வை தெளிவாக உள்ளது.
சடைச்சியம்மாள் ஒரு ஆண்டுக்கு முன் கீழே விழுந்ததில், சரியாக நடக்க முடியவில்லை. உடல் நலக்குறைவுக்காக, ஒரே ஒரு முறை மட்டும் மருத்துவமனைக்கு சென்றதாக, ரங்கசாமி கூறுகிறார்.மகன்கள் இருப்பதாலும், வயது அதிகமாக இருப்பதாலும் அரசு உதவித் தொகை கிடைக்கவில்லை. தனி வீட்டில் வசிக்கும் இவர்களுக்கு, உள்ளூரில் இருக்கும் பிள்ளைகள், உணவிற்கான பொருட்களை வாங்கித் தருகின்றனர்.தங்களுக்கான உணவை அவர்களே சமைக்கின்றனர். நூறாண்டு கடந்த இருவரும், உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதைப் பார்த்து, அனைவரும் வியப்பில் ஆழ்கின்றனர்.