நெய்ரோபி: ஆசிரியர்கள் போராட்டத்தின் காரணமாக, பள்ளிகளுக்கு விடுமுறை அமலில் இருப்பதால் பாருக்குச் சென்ற கும்மாளம் போட்ட 1000 பள்ளிச் சிறார்களைக் கைது செய்துள்ளனர் நெய்ரோபி போலீசார். கென்யாவில், கடந்த மூன்று வார காலமாக ஆசிரியர்கள் தங்கள் சம்பளத்தை உயர்த்தி வழங்குமாறு, அரசுக்கு எதிராக போராடி வருகின்றனர். இதனால், அங்கு பள்ளிகள் அனைத்தும் கால வரையின்றி மூடப்பட்டுள்ளன. பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால், அங்குள்ள சிறுவர்கள் சுதந்திரமாக, பல சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். மது போன்ற போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி தங்கள் வாழ்க்கையை சிதைத்தும் வருகின்றனர். கிளப்களிலும், மதுபானக் கடைகளிலும் பள்ளிச் சிறுவர்கள் குடித்துவிட்டு, கும்மாளமிடுவதாகவும், ரகளை செய்வதாகவும் போலீசாருக்கு கிடைத்த தகவலையடுத்து , போலீசார் மேற்கொண்ட தேடுதல் வேட்டையில் நேற்று மட்டும் நெய்ரோபியில் சுமார் 1000 பள்ளிச் சிறுவர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர். தங்களது பிள்ளைகள் கைது செய்யப் பட்ட தகவல் அறிந்து, அவர்களது பெற்றோர்கள் காவல் நிலையம் முன்பு கூடினர். சிறுவர்களை மது அருந்த அனுமதித்த குற்றத்திற்காக மதுபானக் கடை உரிமையாளர்களும் கைது செய்யப் பட்டுள்ளனர்.