திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே காசிபாளையத்தில் தனியார் நூற்பு மில் உள்ளது. இந்த மில்லில் ஏராளமான பஞ்சு பேல்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு 9 மணியளவில் திடீரென பஞ்சு பேலில் தீப்பிடித்தது. காற்று வேகமாக வீசியதால் பஞ்சு பேல் முழுவதும் தீ பரவியது. கண் இமைக்கும் நேரத்தில் அந்த இடமே புகைமண்டலமாக காட்சி அளித்தது. இதனால் மில் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
விண்ணை தொடும் அளவுக்கு புகை கிளம்பியதால் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து உடனடியாக வேடசந்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
இதுகுறித்து வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், மின்வயர்கள் ஒன்றோடு ஒன்று உரசியதால் தீப்பொறி பறந்தது. இதன் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.