முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா-இலங்கை இன்று மோதல்

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா-இலங்கை இன்று மோதல்

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. இதன் முதலாவது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையும், 2-வது ஆட்டத்தில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவையும் வீழ்த்தி தொடர்ந்து 2 வெற்றி கண்டு உள்ளது.

இந்த நிலையில் கிங்ஸ்டனில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் 3-வது லீக் ஆட்டத்தில் இந்தியா-இலங்கை அணிகள் மோதுகின்றன. வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக நேற்று முன்தினம் நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணியின் பேட்டிங் சொதப்பலாக இருந்தது. ரோகித் ஷர்மா, சுரேஷ் ரெய்னா மட்டுமே ஓரளவு ரன் சேர்த்தனர்.

சாம்பியன்ஸ் கோப்பையில் சிறப்பாக ஆடிய ஷிகர் தவான், தினேஷ் கார்த்திக், விராட்கோலி பேட்டிங்கில் எழுச்சி காண வேண்டியது அவசியமாகும். இந்திய அணியின் பந்து வீச்சு நன்றாக உள்ளது. காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்ட இந்திய அணி கேப்டன் டோனி 3 நாடுகள் போட்டியில் இருந்து விலகுவதாக நேற்று இரவு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது இந்திய அணிக்கு பெருத்த பின்னடைவாகும். இலங்கை அணியில் ஜெயவர்த்தனே, கேப்டன் ஏஞ்சலோ மேத்யூஸ் ஆகியோரின் பேட்டிங் மட்டுமே முதல் ஆட்டத்தில் எடுபட்டது. மலிங்கா, அஜந்தா மென்டிஸ் பந்து வீச்சு எதிர்பார்ப்புக்கு ஏற்ப அமையவில்லை.

இரு அணிகளும் வெற்றி கணக்கை தொடங்க போராடும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இன்றைய ஆட்டத்தில் மழை குறுக்கிட வாய்ப்பு இருக்கிறது. இன்று மழை பெய்ய 40 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக அங்குள்ள வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை டென் கிரிக்கெட் மற்றும் தூர்தர்ஷன் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. இந்தியா-இலங்கை அணிகள் இதுவரை 140 ஒருநாள் போட்டியில் மோதி இருக்கின்றன. இதில் இந்திய அணி 76 முறையும், இலங்கை அணி 52 தடவையும் வெற்றி கண்டுள்ளன. ஒரு ஆட்டம் ‘டை’ ஆனது. 11 ஆட்டங்கள் முடிவு இல்லாமல் போனது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Connect with Facebook