தற்போது ரேணுகாதேவி, சந்தியா, சாரதா, வனஜா, சங்கீதா, வினோதினி ஆகிய 6 மாணவிகளும் சுத்தம் செய்யும் பணியை செய்து வருகின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை அன்று 6 மாணவிகளும் கழிவறையை சுத்தம் செய்து விட்டு வகுப்பறைக்கு வந்தபோது அவர்களை சக மாணவிகளான ராசாத்தி, துர்காதேவி ஆகிய இருவரும் கிண்டல் செய்து நீங்கள் கக்கூஸ் கழுவும் மாணவிகள் எனவே எங்கள் பக்கத்தில் உட்காராதீர்கள் என்று கூறி உள்ளனர். இதனால் மாணவிகளுக்கு இடையே காரசாரமான மோதல் ஏற்பட்டது.
இதை பார்த்ததும் அங்கு வந்த தலைமை ஆசிரியை மாணவிகள் ராசாத்தி மற்றும் துர்காதேவியை சடையை பிடித்து இழுத்து பிரம்பால் பயங்கரமாக தாக்கினார். அழுதுகொண்டே மாணவிகள் இருவரும் வீட்டுக்கு சென்று விட்டனர். பிரம்பால் அடி வாங்கிய ராசாத்திக்கு காய்ச்சல் ஏற்படவே கடந்த 2 நாட்களாக பள்ளிக்கு செல்லவில்லை.
இதனிடையே மாணவிகளை கழிவறையை சுத்தம் செய்ய வைத்த விவகாரம் அவர்களது பெற்றோர்களுக்கு தெரிய வந்தது. அவர்கள் அனைவரும் கல்வி அதிகாரிகளிடம் புகார் செய்ய விரைந்துள்ளனர். குஜிலியம்பாறையில் மாணவிகளை பிரம்பால் அடித்ததும், கழிவறையை சுத்தம் செய்ய வைத்த சம்பவமும் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.