ஆம்பூர்: வேலூர் மாவட்டம் ஆம்பூரில் பள்ளி மாணவர்களுக்கான சத்துணவுக்கு அழுகிய முட்டைகளை சப்ளை செய்த நிறுவனத்தின் உரிமைத்தை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கெட்டுப்போன 100000 முட்டைகளை அதிகாரிகள் குழிதோண்டி புதைத்தனர் பீகார் மாநிலத்தில் அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகள் உயிரிழந்ததை அடுத்து தமிழக பள்ளிகளில் சத்துணவு பணி தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வேலூர் மாவட்டம் ஆம்பூர் பள்ளிகளில் புழுக்கள் நெளியும் அழுகல் முட்டைகள் சப்ளை செய்யப்பட்ட சம்பவம் அதிகாரிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. வேலூர் மாவட்டம் மாதனூர் ஒன்றியத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த பள்ளி மாணவர்களுக்கு மாதனூர் ஒன்றிய அலுவலகம் மூலமாக முட்டை வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. நேற்று மஜ்ஹருல் உலூம் தொடக்க பள்ளியில் முட்டை சப்ளை செய்யப்பட்ட போது வேனில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதை கவனித்த பெற்றோர் தலைமை செயலாளர் ரூமிக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த அவர் 1,600 முட்டைகளையும் பரிசோதித்தபோது அனைத்து முட்டைகளும் கரிய நிறத்தில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். முட்டைகளை உடைத்து பார்த்ததில் புழுக்கள் நெளிந்தன. வேறு சில பள்ளிகளில் சப்ளை செய்யப்பட்ட முட்டைகளையும் பரிசோதித்ததில் அவை அழுகி இருந்ததை பார்த்து பெற்றோரும் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து பெற்றோர்கள் அளித்த புகாரின்பேரில் ஆம்பூர் சமூக பாதுகாப்பு தாசில்தார் பள்ளிக்கு வந்து முட்டைகளை ஆய்வு செய்து கலெக்டர் அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர். வருவாய்த்துறை அதிகாரிகள் அழுகிய முட்டைகளை உடனடியாக அப்புறப்படுத்த உத்தரவிட்டனர். இதனிடையே 113 அங்கன்வாடி மற்றும் 110 சத்துணவு மையங்களுக்கு ஏற்கனவே அனுப்பப்பட்ட சுமார் 1 லட்சம் முட்டைகளை அழிக்கப்பட்டது. முட்டையை பரிசோதனை செய்யாமல் பள்ளிகளுக்கு அனுப்பிவைத்த மாதனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் பணியாற்றும் இளநிலை உதவியாளர் பாலய்யாவை சஸ்பெண்ட் செய்து கலெக்டர் சங்கர் உத்தரவிட்டுள்ளார். உரிமம் ரத்து இந்த நிலையில் ஆம்பூர் பகுதியில் உள்ள 20 பள்ளிகளுக்கு நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சொர்ணபூமி என்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தினர் முட்டை சப்ளை செய்துள்ளது தெரியவந்தது. இது தொடர்பான விசாரணை அறிக்கையை கலெக்டர் சங்கரிடம் அளிக்கப்பட்டது. இதனையடுத்து அழுகிய முட்டையை சப்ளை செய்த சொர்ணபூமி என்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்க கலெக்டர் சங்கர் உத்தரவிட்டுள்ளார். உடனடியாக உரிமத்தை ரத்து செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான பள்ளிக்குழந்தைகளுக்கு தினசரி மதிய உணவில் முட்டை வழங்கப்படுகிறது. இவற்றை பரிசோதித்து வழங்கவேண்டும் என்பது பெற்றோர்கள், பொதுமக்களின் கோரிக்கையாகும்.