ஜொஹன்னஸ்பர்க்: நுரையீரல் கோளாறு காரணமாக மருத்துவமனையில் இருக்கும் தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா செயற்கை சுவாசம் மூலம் மூச்சு விடுகிறார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா நுரையீரல் கோளாறு காரணமாக கடந்த மாதம் 8ம் தேதி ப்ரிடோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இருப்பினும் அவரது உடல் நிலை கவலைக்கிடமாகவே உள்ளது. மண்டேலா செயற்கை சுவாசம் மூலமாகத் தான் மூச்சுவிடுகிறார் என்று அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். மண்டேலாவின் நிலைமை கடந்த 23ம் தேதியில் இருந்தே கவலைக்கிடமாக உள்ளது. வரும் 18ம் தேதி மண்டேலாவின் 95வது பிறந்தநாள் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.