தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி தேரியூரைச் சேர்ந்தவர் சுதாகர் (வயது 35). இவருக்கும், உடன்குடியை அடுத்த சாமியார்தோப்பை சேர்ந்த சிவமுருகன் மகள் சூரியா (30) என்பவருக்கும் கடந்த மாதம் திருமணம் நடந்தது.
இந்நிலையில் இருவரும் நேற்று ஒரு ஆம்னி வேனில் சாமிதோப்பு வைகுண்ட சுவாமி கோவிலுக்கு சென்றனர். பின்னர் இரவு தட்டார் மடம் வழியாக உடன்குடிக்கு திரும்பினர். வேனை கணவர் சுதாகர் ஓட்டி வந்தார்.
நடுவக்குறிச்சி மின் வாரிய அலுவலகம் அருகே வந்தபோது வேன் நிலை தடுமாறி மின்கம்பத்தில் மோதியதில் சூரியா இறந்து விட்டதாக சுதாகர் தட்டார் மடம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.
இன்ஸ்பெக்டர் மதி வாணன், சப்–இன்ஸ்பெக்டர் வர்கீஸ்அம்மாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சூரியாவின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்த சூரியாவின் கழுத்தில் கத்தியால் குத்தியதுபோல் காயம் மட்டும் இருந்தது. வேறு எந்த இடத்திலும் காயம் இல்லை. விபத்தில் சிக்கியதாக கூறப்படும் காருக்கும் சேதம் ஏற்படவில்லை. மேலும் விபத்து நடந்த இடத்தில் கத்தி ஒன்றை போலீசார் கைப்பற்றினர். இது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சூரியா கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டது பிரேத பரிசோதனையில் தெரிய வந்தது.
இதையடுத்து சுதாகரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் சூரியாவை கொலை செய்ததாக அவர் ஒப்புக்கொண்டார்.
சுதாகருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்துள்ளது. இதை சூரியா கண்டித்து வந்துள்ளார்.
சம்பவத்தன்று காரில் கோவிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பியபோது இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு எற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சுதாகர் மனைவி சூரியாவை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு விபத்தில் இறந்ததாக நாடகமாடினார்.
சுதாகரை கைது செய்த போலீசார் அவரிடம் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.