உலக நாடுகளின் கம்ப்யூட்டர்களையும், தூதரக ரகசிய செய்திகளையும் அமெரிக்கா உளவு பார்த்து வந்த தகவல்களை வெளியிட்ட எட்வர்ட் ஸ்னோடென் ரஷ்யாவின் மாஸ்கோ விமான நிலையத்தின் பயணிகள் பகுதியில் தங்கியுள்ளார்.
ரஷ்ய அரசிடம் அரசியல் தஞ்சம் கேட்டு ஒப்புதலுக்காக அவர் காத்திருக்கிறார்.
அரசு ஊழியராக பணி புரிந்து அமெரிக்காவின் ரகசியங்களை வெளியிட்ட தேசத்துரோகிக்கு ரஷ்யா குடியுரிமை வழங்கக் கூடாது. உடனடியாக எட்வர்ட் ஸ்நோடெனை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அமெரிக்கா கூறி வருகிறது.
இந்நிலையில், ஸ்வீடன் நாட்டை சேர்ந்த பேராசிரியர் ஸ்டெபென் ஸ்வால்ஃபோர்ஸ் என்பவர் நோபல் பரிசுக்கு எட்வர்ட் ஸ்நோடெனின் பெயரை பரிந்துரை செய்துள்ளார்.
அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரம் பறிக்கப்படுவதை எதிர்த்து தனி நபர்கள் போராடலாம் என்பதை தனது வாழ்க்கையையும், உயிரையும் பணயம் வைத்து எட்வர்ட் ஸ்நோடென் நிரூபித்துள்ளார்.
அவரது இந்த முன்முயற்சி, அமைதிக்கான நோபல் பரிசுக்கான அனைத்து தகுதிக்கும் உரியதாகும். மேலும் 2009ம் ஆண்டு அவசரக் கோலத்தில் குளறுபடியாக அமைதிக்கான நோபல் பரிசை அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு வழங்கிய களங்கத்தையும் எட்வர்ட் ஸ்நோடெனுக்கு இந்த பரிசை வழங்குவதன் மூலம் போக்கிக் கொள்ளலாம் என அந்த பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.