அதன்படி நேற்று பிரேம்நசீர் நெல்லையில் இருந்து நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் சென்னை புறப்பட்டார். அவருடன் அவரது மனைவி பார்கவி, குழந்தை ஆகியோரும் வந்தனர். அவர் ஒரு சூட்கேசில் துணிமணிகளும், மற்றொரு சூட்கேசில் அமெரிக்க டாலர், சிங்கப்பூர் டாலர், யூரோ உள்பட 10 வெளிநாட்டு பணத்தை வைத்திருந்தார்.
அந்த வெளிநாட்டு பணத்தின் இந்திய மதிப்பு ரூ.63 லட்சம் ஆகும். தூங்கும் வசதி கொண்ட பெட்டியில் பயணம் செய்த அவர் செங்கல்பட்டு அருகே வந்தபோது தனது பெட்டியை பார்த்தார். அப்போது வெளிநாட்டு பணம் வைத்திருந்த பெட்டியை மட்டும் காணவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் ரெயிலில் பல இடங்களில் தேடினார். ஆனால் அந்த பெட்டி கிடைக்கவில்லை. அதற்குள் ரெயில் எழும்பூர் ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. இதனால் பிரேம்நசீர் எழும்பூர் ரெயில் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் தாம்பரம் ரெயில்வே போலீசில் புகார் செய்யும்படி கூறினார்கள்.
அதன்படி அவர் தாம்பரம் ரெயில்வே போலீசில் இதுபற்றி புகார் கொடுத்தார். ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். வெளிநாட்டு பணம் வைத்திருந்த பெட்டியை மட்டும் காணவில்லை என்பதால் பிரேம்நசீர் பற்றி நன்றாக தெரிந்த நபர்களே இந்த கைவரிசையை காட்டி இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.