குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பித்து உரிய தேர்வு கட்டணம் செலுத்திய அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ஆன்லைனில் ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டு இருப்பதாக டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது. இதுதொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
குரூப்-4 தேர்வு 25-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்பட உள்ளது. தேர்வுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு கடந்த 14-ந் தேதி ஆன்லைனில் ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டது.
தேர்வுக்கு விண்ணப்பித்து உரிய தேர்வு கட்டணம் செலுத்தியும் ஹால்டிக்கெட் கிடைக்கப்பெறாதவர்கள் தாங்கள் விண்ணப்பித்து கட்டணம் செலுத்தியதற்கான படிவத்தை 19-ந் தேதிக்குள் டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்திற்கு இ-மெயில் மூலமாக அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு இருந்தார்கள்.
அவ்வாறு அனுப்பிய அனைவருக்கும் தற்போது ஆன்லைனில் ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டு உள்ளது. விண்ணப்பதாரர்கள் குரூப்-4 தேர்வுக்கான பதிவு எண்ணை உள்ளீடு செய்து ஹால்டிக்கெட்டை டவுன்லோடு செய்துகொள்ளலாம்.
இ-மெயில் மூலமாக அனுப்பியும் ஹால்டிக்கெட் கிடைக்கப்பெறாதவர்கள் தங்கள் விண்ணப்பம் மற்றும் உரிய தேதியில் கட்டணம் செலுத்தியதற்கான செலான் ஆகியவற்றின் நகலுடன், தேர்வு எழுத தேர்வு செய்த தேர்வு மையம் அமைந்துள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பணியில் இருக்கும் டி.என்.பி.எஸ்.சி. அதிகாரியை 23, 24-ந் தேதிகளில் அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
நிரந்தர பதிவில் மட்டுமே பதிவு செய்து குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்காதவர்கள், விண்ணப்ப கட்டணம், தேர்வு கட்டணம் செலுத்தாதவர்கள் தேர்வுக்கு அனுமதிக்கப்படமாட்டார்கள்.
இவ்வாறு ஷோபனா கூறியுள்ளார்.