தேனி-மதுரை சாலையில் ஒரு பிரபல தனியார் ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு சர்க்கரை நோய், இருதய நோய் மற்றும் பொது மருத்துவ நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வெளிநோயாளிகள் மட்டுமின்றி ஏராளமான உள்நோயாளிகளும் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த ஆஸ்பத்திரியில் இன்று காலை ஏ.சி. அறையில் மின் கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டு புகை மூட்டமாக வெளியே கிளம்பியது. இதை பார்த்ததும் ஆஸ்பத்திரி ஊழியர்கள், நோயாளிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
இதுகுறித்து உடனடியாக தேனி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் உமயகுமார் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
உரிய நேரத்தில் தீ விபத்து கண்டுபிடிக்கப்பட்டு அணைக்கப்பட்டதால் வேறு எந்த அசம்பாவிதமும் நடைபெறவில்லை. விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தேனி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தால் இப்பகுதியில் இன்று பரபரப்பு ஏற்பட்டது.