திண்டுக்கல்:திண்டுக்கல்லில் முகமூடி கொள்ளையர்கள் வக்கீல், அவரது தந்தையை தாக்கி கட்டி போட்டு, வீட்டில் இருந்த 16 பவுன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்தனர்.
திண்டுக்கல் நாகல்நகர் பாம்பன் ஆசாரி சந்தை சேர்ந்தவர் அழகர்,82. ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரி. இவரும், இவரது மகன் வக்கீல் கண்ணன்,52, (இவருக்கு திருமணமாகவில்லை) வீட்டில் இருந்தனர்.
நேற்று அதிகாலை ஒரு மணிக்கு, வீட்டு கதவை முகமூடி அணிந்த 3 பேர் தட்டினர். அழகர் கதவை திறந்தார். அவரை கீழே தள்ளி, தலையில் இரும்பு கம்பியால் தாக்கினர். சப்தம் கேட்டு ஒடி வந்த கண்ணனையும் கம்பியால் தலையில் தாக்கி, கத்தியால் குத்தினர். கண்ணன் மயங்கி விழுந்தார். அங்கிருந்த, வக்கீல் அணியும் டையை எடுத்து அழகரின் காலை கட்டினர். பீரோவை திறந்து, உள்ளே இருந்த துணிகளை வெளியே தூக்கி எறிந்தனர். அதில் இருந்த 16 பவுன் நகைகள், ரூ.2 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
அலறல்: வீட்டில் மயங்கி கிடந்த அழகர், அதிகாலை 4 மணிக்கு மயக்கம் தெளிந்து, காலில் கட்டியிருந்த டையை கழற்றினார். பின்பு வெளியே வந்து அலறினார், அப்பகுதியில் குடியிருப்பவர்கள் யாரும் கதவை திறந்து வெளியே வரவில்லை. நகர் தெற்கு போலீசாருக்கு தகவல் தரப்பட்டது. இன்ஸ்பெக்டர் பொன்னிவளவன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். காயமடைந்த அழகர், கண்ணனை மதுரை தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மோப்பநாய் ருக்கி மோப்பம் பிடித்து விட்டு, சிறிது தூரம் ஓடியது. விரல் ரேகை நிபுணர் சோதனை நடத்தினார். சம்பவ இடத்தை ஜெயச்சந்திரன் எஸ்.பி., பார்வையிட்டார்.
டி.எஸ்.பி., சுருளிராஜா கூறுகையில்,””கொள்ளையர் குறித்து விசாரித்து வருகிறோம். முன்விரோதத்தில் நடந்துள்ளதா என்ற சந்தேகமும் உள்ளது. 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன,”என்றார்.
மது கொள்ளையர்: பாம்பன் ஆசாரி சந்தை சுற்றி வீடுகள் பல உள்ளன. கொள்ளையர்கள் தாக்கும் போது, அழகரும், கண்ணனும் கூச்சலிட்டுள்ளனர். ஆனால் அருகில் இருந்தவர்கள் யாருக்கும் கேட்கவில்லை. அதிகாலை 4 மணிக்கு போலீசார் வந்தபோதும், யாரும் வரவில்லை. காலை 7 மணிக்குத்தான் வெளியே வந்தனர். கொள்ளை சம்பவம் நடந்த வீட்டிற்கு அருகே டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் கொள்ளையர்கள் மது குடித்து விட்டு, வந்துள்ள விபரம் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.