திண்டுக்கல், : திண்டுக்கல்லில் குறைந்த வட்டியில் நகைக்கடன் தருவதாக கூறி பல லட்சம் மதிப்பிலான நகைகளை மோசடி செய்த தனியார் நிதிநிறுவன நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் அருகே நியூ ஜெயம் கோல்டு பேங்கர்ஸ் என்ற பெயரில் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனத்தில் தங்க நகை அடகு வைத்தால் குறைந்த வட்டில் கூடுதல் பணம் தருவதாக விளம்பரப்படுத்தப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் நகைகளை அடகு வைத்து பணம் பெற்றனர்.
இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு திடீரென இந்நிறுவனம் மூடபட்டது. அடகு வைத்த நகையை மீட்க சென்றவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பாதிக்கப்பட்டவர்கள் எஸ்பி ஜெயச்சந்தினிடம் புகார் மனு கொடுத்தனர். எஸ்பி உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நிதி நிறுவன நிர்வாகிகளான திண்டுக்கல் அருகே அனுப்பபட்டியை சேர்ந்த டேனியல் (35) சாமுவேல், சாலமன், டேனியல் மனைவி பெமினாசோபியா, பால்பெனடிக் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், நிதி நிறுவன நிர்வாகிகள் பொதுமக்களிடம் தங்க நகைகளுக்கு குறைந்த வட்டியில் கூடுதல் பணம் தருவதாக கூறி பல லட்சம் மதிப்பிலான நகைகளை பெற்று, அதனை மற்றொரு நிதி நிறுவனத்தில் கூடுதல் தொகைக்கு அடகு வைத்து பணத்தை பெற்றுச் சென்றது தெரியவந்தது. தலைமறைவாக உள்ள நிர்வாகிகளை கைது செய்ய இன்ஸ்பெக்டர் பாண்டியராஜன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.