மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போலி அடையாள அட்டைகளுடன் வந்த நபர் போலி அதிகாரியா? அல்லது மனநலம் பாதிக்கப்பட்டவரா என போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டத்தில், பொதுமக்கள் வழங்கும் கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் பெற்றுக்கொள்வார். அதன் பின்னர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் அந்த இடத்திலேயே மனுக்களை கொடுத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடுவார்.
இந்நிலையில் திங்கள்கிழமை காலை குடிநீர் வடிகால் வாரியம் தொடர்பான பிரச்னைக்கு, தொடர்பு அலுவலரை, அதிகாரிகள் அழைத்ததாகத் தெரிகிறது. அப்போது, குடிநீர் வடிகால் வாரிய உதவி இயக்குநர் என 2 பேர் எழுந்துள்ளனர். அடுத்தடுத்து இருவர் நின்றதால், அதிகாரிகளுக்கு குழப்பம் ஏற்பட்டது.
இதுகுறித்து விசாரித்தபோது, ஒருவர் போலியான அடையாள அட்டையுடன் வந்திருப்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர். அவரிடம் மாவட்ட ஆட்சியரின் உதவியாளர் (பொது) சக்திவேல் விசாரித்தபோது, தன் பெயர் கனிராஜ் (47) என்றும், தேனி மாவட்டம் கடமலைக்குண்டு பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் தான் வேளாண்மைத்துறை உதவி இயக்குநராக பணியாற்றுவதாகவும், தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் திட்ட மேலாளர் என்றும், 108 ஆம்புலன்ஸ் ஒருங்கிணைப்பாளர் என்றும் முன்னுக்குப்பின் முரணாக தெரிவித்துள்ளார். அவர் வைத்திருந்த பையில் மத்திய- மாநில அரசுகளின் முத்திரையுடன் 15 க்கும் மேற்பட்ட அடையாள அட்டைகள் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து அவரை தாடிக்கொம்பு போலீஸாரிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர். அவரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
இதுபற்றி வழக்கமாக குறைதீர் கூட்டத்துக்கு வரும் அதிகாரி ஒருவர் கூறும்போது, தற்போது பிடிபட்ட அந்த நபர் 6 மாதங்களாக கூட்டத்துக்கு வருகிறார். அதனால் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்க முடியாது என்றார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலம் தெரிவித்து:
குடிநீர் வடிகால் வாரிய உதவி இயக்குநர் என கூறிக்கொண்டு வந்தவர், போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இனி வரும் நாள்களில் கூட்டத்துக்கு வரும் அதிகாரிகள் கண்டிப்பாக அடையாள அட்டை அணிந்து வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.