வானூர் வட்டத்தைச் சேர்ந்த இருளர் இன மாணவர் ஜாதிச் சான்று இல்லாததால் கல்லூரியில் சேர முடியாமல் தவித்து வருகிறார்.
÷இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கு பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது. இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரபா.கல்விமணி (எ) கல்யாணி மனுவில் கூறியுள்ள விவரம்:
÷வானூர் வட்டம், பொம்பூர் கிராமத்தில் 30-க்கும் மேற்பட்ட இருளர் குடும்பங்கள் பல தலைமுறையாக வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் செங்கல் சூளைகளிலும், விவசாய நிலங்களிலும் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் இலவச வீட்டுமனைப் பட்டாக்களும், தொகுப்பு வீடுகளும் வழங்கப்பட்டுள்ளன.
இக் குடியிருப்பில் வசித்து வரும் மீனாவின் கணவர் பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர் கூலி வேலை செய்து தன் மகன் மணிகண்டனை பிளஸ் 2 வரை படிக்க வைத்துள்ளார். திண்டிவனம் ஆ.கோவிந்தசாமி அரசினர் கலைக் கல்லூரியில் இருந்து பட்டப்படிப்பில் சேர கலந்தாய்வுக் கூட்ட அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. மணிகண்டன் தன் தாய் மீனாவுடன் கடந்த ஜூன் 27-ம் தேதி கல்லூரிக்குச் சென்றார். மணிகண்டனுக்கு ஜாதிச் சான்று இல்லாததால் அவரால் கல்லூரியில் சேர முடியவில்லை. கல்லூரி நிர்வாகம் ஒரு வாரம் மணிகண்டனுக்கு காலஅவகாசம் அளித்துள்ளது. எனவே ஜாதிச்சான்று கோரி மீனா விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியரிடம் ஜூன் 28-ம் தேதி மனு அளித்துள்ளார். மாவட்ட ஆட்சியர் விரைவில் மணிகண்டனுக்கு இனச்சான்று வழங்க உத்தரவிட வேண்டும். மணிகண்டன் கல்லூரியில் இடம் கிடைத்து சேர்ந்தால் அவர் அந்த இருளர் குடியிருப்பின் முதல் பட்டதாரி என்பது குறிப்பிடத்தக்கது என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.