சிதம்பரம்: சிதம்பரம் அருகே விவசாயி வீட்டுக்குள் நள்ளிரவில் புகுந்த முதலை அங்கிருந்த ஆட்டுக் குட்டியை விழுங்கியது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள இளநாங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் கொளஞ்சியப்பன், விவசாயி. நேற்று முன்தினம் இரவு 1 மணியளவில் இவரது வீட்டின் பின்பகுதியில் உள்ள கொட்டகையில் நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டது. திடுக்கிட்டு எழுந்த கொளஞ்சியப்பன் பார்த்தபோது, அங்கிருந்த ஆட்டுக்குட்டி ஒன்றை முதலை விழுங்கிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அக்கம்பக்கத்து வீடுகளை சேர்ந்தவர்கள் உதவியுடன் முதலையை பிடித்து கட்டிப் போட்டனர். சுமார் 200 கிலோ எடையும், 12 அடி நீளமும் கொண்டதாக அந்த முதலை இருந்தது. இது குறித்து சிதம்பரம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் முதலையை கொண்டுச் சென்றனர். சி.வக்காரமாரி கிராமத்தில் இருந்து சிதம்பரம் நகருக்கு குடிநீர் அனுப்பும் 2 பெரிய குளங்கள் வறண்டு விட்டன. எனவே, அங்கிருந்து முதலைகள் அவ்வப்போது வெளியேறி கிராமத்துக்குள் புகுந்துவிடுகின்றன. அதுபோல இந்த முதலையும் வந்திருக்கலாம் என கருதப்படுகிறது.