கைரேகை சான்று அளித்தால் மட்டுமே சிம் கார்டு வாங்க முடியும்

கைரேகை சான்று அளித்தால் மட்டுமே சிம் கார்டு வாங்க முடியும்

புதுடில்லி : சிம் கார்டுகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக சிம் கார்டு வாங்குபவர்கள் உடல்சார்ந்த சான்று அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வர உள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம், தொலைத்தொடர்புத் துறைக்கு அளித்த பரிந்துரையின் பேரில் மொபைல் போன் வாடிக்கையாளர்கள், தாங்கள் வாங்கிய சிம் கார்டு நம்பர் செயல்பாட்டிற்கு வருவதற்கு முன் கைரேகை அல்லது உடல்சார்ந்த ஏதேனும் ஒரு சான்றை கட்டாயமாக அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்துறை அமைச்சக பரிந்துரை:

உள்துறை அமைச்சகம் தொலைத்தொடர்பு துறைக்கு அளித்துள்ள பரிந்துரையில், ‌மொபைல் வாடிக்கையாளர்கள் குறித்த உடல்சார்ந்த சான்றி புள்ளிவிபரமாக கையாளப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு நோக்கில், தேசிய புலனாய்வு அமைப்பகத்துடன் இணைந்து அனைத்து வாடிக்கையாளர்களிடமும் உடல்சார்ந்த சான்று சேகரிக்கப்பட உள்ளது. இந்த புதிய திட்டம் குறித்து தொலைத் தொடர்புத்துறை, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உள்ளிட்ட பங்குதாரர்களிடம் ஆலோசனை நடத்தி வருகிறது. அதிக சிம் கார்டுகளை விற்க வேண்டும் என விற்பனையாளர்களிடம் நிலவும் கடும் போட்டியில் உடல்சார்ந்த சான்று சரிபார்ப்பது எளிதான காரியம் அல்ல என தொலைத் தொடர்புத்துறை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

தவறான பயன்பாடு :

மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு பின் சிம் கார்டு விற்பனையில் அதிக கெடுபிடி கொண்டு வரப்பட்டுள்ளது. மும்பை தாக்குதலில் ஈடுபட்ட லக்ஷர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பினர் உள்ளூர் ஆட்களை தொடர்பு கொள்ள இந்திய சிம் கார்டுகளை பயன்படுத்தியது விசாரணையில் தெரிய வந்தது. மேலும் போலி ஆவணங்கள் மூலம் இவர்கள் இந்த சிம் கார்டுகளை பெற்றதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. மொபைல் வாடிக்கையாளர்களிடம் சிம் கார்டு விற்பனைக்கு முன் உடல்சார்ந்த சான்றுகளை பெற தொலைத்தொடர்பு துறை முடிவு செய்திருந்தது. ஆனால் சிம் கார்டு தொடர்பாக விற்பனையாளர்களிடம் இருந்து நாடு முழுவதும் ஏராளமான புகார்கள் வந்து கொண்டு இருந்தன. இந்த உத்தரவு முறையாகவும் கடுமையாகவும் பின்பற்றாததே இதற்கு காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு நடவடிக்கை :

இந்த திட்டம் குறித்து கடந்த மாதம் நடைபெற்ற உள்நாட்டு பாதுகாப்பு குறித்த மாநில முதல்வர்கள் மாநாட்டில் ஆலோசனை செய்யப்பட்டுள்ளது. விநியோகஸ்தர்கள் மற்றும் விற்பனையாளர்களின் அலட்சியம் காரணமாகவே சிம் கார்டுகள் பயங்கரவாதிகள் மற்றும் சமூக விரோதிகளிடம் உரிய ஆவணங்கள் இல்லாது அல்லது போலி ஆவணங்கள் பெறப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக அம்மாநாட்டில் கூறப்பட்டது. அதை தொடர்ந்து கை விடப்பட்ட இந்த திட்டம், மே 15ம் தேதி டில்லி போலீஸ் கமிஷ்னர் நீரஜ்குமார் உள்துறை அமைச்சகத்திற்கு எழுதிய கடிதத்தில் இந்த திட்டத்தை மீண்டும் கொண்ட வர வலியுறுத்தினார். விற்பனையாளர்கள் ஒரே சமயத்தில் அதிகளவிலான சிம் கார்டுகளை ஒரே நபரிடம் விற்பனை செய்வதே அந்த சிம் கார்டுகள் குற்றவாளிகளின் கையில் சென்று நாட்டின் பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது என குறிப்பிட்டுள்ளார். மேலும் மொபைல் போன்கள் மூலமே அதிகளவிலான சைபர் குற்றங்கள் நடைபெறுவதால் அவற்றை தடுக்க இந்த திட்டம் அத்யாவசியமாகிறது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் தொலைத் தொடர்பு துறையும், டிராய் அமைப்பும் சிம் கார்டு விற்பனையில் கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டு வர வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Connect with Facebook